புதுடெல்லி : டெல்லியில் பூசா நகரில் சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ற்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றையும், அஞ்சல் தலை ஒன்றையும் வெளியிட்டார்.
பின்னர் இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டில் இந்தியா முன்னிலை வகிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். சர்வதேச சிறுதானியங்கள் மாநாடு போன்ற நிகழ்வுகள், சர்வதேச நலன்களுக்கு தேவையானது மட்டுமின்றி உலகளாவிய நன்மைக்கான இந்தியாவின் அதிகரித்து வரும் பொறுப்புணர்வுக்கான அடையாளமும் ஆகும் . இந்தியாவின் முன்மொழிவுகள் மற்றும் முயற்சிகளுக்கு பின்னர், 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. அமைப்பு அறிவித்து இருப்பது என்பது நமக்கு கிடைத்த மிக பெரிய கெளவுரவத்திற்குரிய விஷயம். இந்தியாவின் சிறுதானிய இயக்கம், 2.5 கோடி விளிம்பு நிலையிலான விவசாயிகளுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களாக அமையும். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சிறுதானிய விவசாயிகளுக்கு முதன்முறையாக அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.