சென்னை: ஜவுளித் துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ம.பி மற்றும் உ.பி.யில் பி.எம். மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஜவுளி பூங்கா அமைக்க தமிழகத்தின் விருதுநகரை தேர்வு செய்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 7 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.