சென்னை: மின் கட்டணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தாதவர்களால், வாரியத்துக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 10-ம் தேதி தாழ்வழுத்தப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தைத் தாண்டி 10 நாட்களாகியும் 44,732 பேர் கட்டணம் செலுத்தாதது கண்டறியப்பட்டது. குறிப்பாக, வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்இணைப்பின் கீழ் 44,715 பேர் மின் கட்டணம் செலுத்தாதது தெரியவந்துள்ளது. அவர்கள் ரூ.30.91 கோடி நிலுவை வைத்துள்ளனர்.
சென்னை தெற்கு-2 வட்டத்தைச் சேர்ந்த 10,540பேர், ரூ.5.85 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதேபோல, வணிகப் பிரிவில் 17 பேர் ரூ.1.53 கோடி மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். அதிகபட்சமாக திருநெல்வேலி பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த 2 பேர், ரூ.1.38 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. மின் கட்டணம் செலுத்தாமல் இருப்போரில், அரசு அலுவலகங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து நுகர்வோரின் இணைப்பையும் துண்டிக்க வேண்டும் என வாரியத்தின் வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டுள்ளார்.