இந்தியாவின் நடனம் மற்றும் கலைகளை விளக்கும் சேவை செய்து வருபவர் வி.ஆர்.தேவிகா. மிகுந்த ஆவலுடன் ஆசிரியராகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். கலையின்பால் அதீத காதல் கொண்டவர் அவர். ஆசிரியராகத்தன் அனுபவத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார் தேவிகா.
கர்நாடகாவில் உள்ள மைசூரில் வளர்ந்தவர் தேவிகா. தன் படிப்பை மைசூரில் முடித்துவிட்டு சகோதரருடன் சென்னைக்கு வந்தாராம் அவர். சிறு வயது முதலே பார்க்கும் கலைகளைப் பற்றி எல்லாம் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவாராம் தேவிகா.
சென்னை வந்தவுடன் ஒரு சிறிய கிண்டர்கார்டன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார் தேவிகா.
‘குழந்தைகளுக்கு சொல்லித்தர எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஒவ்வொரு குழந்தையும் மறுநாள் குதூகலத்துடனும் முகத்தில் புன்னகை யோடும் வர வேண்டும் என்பது எனது நோக்கம். எவ்வளவு சிறிய குழந்தையாக இருந்தாலும் கலை மீது அவர்களுக்கு ஆர்வம் வர வேண்டும். அதற்கான எனது முழு முயற்சிகளை எடுப்பேன்’ என ஆசிரியராகத் தன் பரிணாமத்தைக் காட்டுகிறார் தேவிகா.
தான் கற்றுக்கொண்டதை குழந்தைகளிடம் எப்படி மிகுந்த தாக்கத்தோடு கொண்டு சேர்ப்பது என்பது மட்டுமே தன் இலக்காக இருந்தது என உணர்ச்சியோடு கூறுகிறார் தேவிகா.
பரதநாட்டிய விற்பன்னர்கள் தனஞ்செயன், சாந்தா தனஞ்செயனிடம் வி.ஆர்.தேவிகா பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். ‘தனஞ்செயன் மகன் எனது மாணவன். ஒருமுறை தனஞ்செயன் மகனிற்கு அவர்களின் வீட்டிற்குச் சென்று பாடம் எடுக்க நேரிட்டது. எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி. காரணம், அவர்கள் வீட்டில் பரதநாட்டியம் சொல்லித்தருவது, ஆடுவது எல்லாவற்றையும் நேரில் பார்க்க முடியும் அல்லவா!! எனக்கு அப்போது 23 வயது. நான் தனஞ்செயனிடம் பரதநாட்டியம் கற்றுக் கொள்ளலாமா எனக் கேட்டேன். ஆனால் நான் மேடைகளில் அரங்கேற்ற மாட்டேன். சிறந்த ஆசிரியராக வருவேன். நான் கற்றுக் கொள்ளலாமா என்று கேட்டபோது அவர்களும் தலையசைக்க அந்த ஆடல் கலையைக் கற்றுக்கொண்டேன்’ எனப் பெருமையுடன் கூறுகிறார் தேவிகா.
‘1979இல் தனஞ்செயனுக்கு ஒரு ஒப்பந்தம் கிடைத்தது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பரதநாட்டியம் பற்றியும் தென்னிந்தியக் கலைகள் பற்றியும் எடுத்துக் கூற வேண்டும். ஆனால் தனஞ்செயன் ரஷ்யாவிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்ததால் அப்பொறுப்பை என்னிடம் கொடுத்தார். தினமும் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வளவு அழகாக அவர்களைக் கவரும் விதமாக நம் நாட்டுக் கலைகளை எடுத்துக் கூற முடியுமோ அப்படிக் கூறுவேன்’ என தன் கலைப் பங்களிப்பைப் பற்றிக் கூறுகிறார் தேவிகா.
அதன் பிறகு அவருக்கு ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாளில் கலைகள் பற்றி எழுதுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. முதலில் தயங்கிய அவர் 200 சொற்களில் ஒரு கட்டுரை எழுதித் தந்தார். அது பத்திரிகையில் வெளியானபோது மிகுந்த உற்சாகம் அடைந்தாராம் தேவிகா. அதே சமயம் கலைகளைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் மிகுந்ததாம். பிறகு நிறைய வகுப்புகளுக்குச் சென்று எப்படிக் கலையைக் கற்றுக்கொள்கிறார்கள் என்று அவர் அறியத் தொடங்கினாராம். இசை வித்தகர்கள் எம்.சுப்புலட்சுமி, செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்ற ஜாம்பவான்களைப் பேட்டி எடுக்கப் போகும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைவாராம். ‘அங்கு கிடைத்த அனுபவங்கள் நான் அடுத்த நிலைக்குப் போக உதவின’ என்று நினைவுகூர்கிறார் தேவிகா.
நாடகக் கலைஞர் எழுத்தாளர் ந.முத்துசாமி மூலமாக தெருக்கூத்து பற்றித் தேவிகா தெரிந்துகொண்டாராம். ’நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு இதனைப் பற்றி தெரிய வைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.’ எனத்தன் ஆர்வத்தை அழகாக வெளிக்காட்டுகிறார் தேவிகா.
1985இல் மேற்கொண்ட அமெரிக்க பயணம் தேவிகாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததாம். ‘அமெரிக்காவில் ஒரு மாநாட்டிற்காகச் சென்றேன். கல்வியில் எப்படிக்கலைகளை இணைத்துக் குழந்தைகளுக்குக் கூறுகிறேன் என்பதைப் பற்றி ஒரு பேப்பர் கொடுக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து வந்ததும் நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு எல்லா பள்ளிகளுக்கும் சென்று கலைகளை அறிமுகம் செய்யத் தொடங்கினேன்’ எனக் கூறுகிறார் தேவிகா.
நாட்டுப்புறக் கலைகள் இப்போது வளர்கின்றனவா என்று கேட்டால், நாட்டுப் புறக் கலைகளை சடங்காகப் பார்க்கலாமா, கலையாகப் பார்க்கலாமா என்ற மாறுபட்ட கருத்துக்கள் உண்டு என்கிறார் தேவிகா.
’சடங்குகளில் உள்ள தேவராட்டத்திற்கும், பள்ளிகளில் ஆடும் தேவராட்டத்திற்கும் வித்தியாசங்கள் கண்டிப்பாக இருக்கும். ஆக, இது வளர்ச்சியா, இழப்பா என்பது கேள்விக்குறியே’ என விளக்குகிறார் தேவிகா.
பாரம்பரிய நிகழ்த்துக் கலைகள், கல்வி மற்றும் மகாத்மா காந்தியின் நோக்கங்கள் ஆகியவற்றை இணைப்பதற்காக அசிமா என்ற அறக்கட்டளையைத் தொடங்கினார் தேவிகா.
கலை, கல்வி மற்றும் நடனப் பங்களிப்புக்காக தேவிகா பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
‘முன்பெல்லாம் பெண்களுக்கு என்று சில கலைகள், ஆண்களுக்கென்று சில கலைகள் இருந்தன. காரணம், சில ஊர்களுக்குச் சென்று ஆடவேண்டும், இரவு நேரங்களில் தங்கி இருக்க வேண்டும் போன்ற இடர்ப்பாடுகள் இருந்தன. ஆனால் இப்பொழுது பெண்களும் நாட்டுப்புறக் கலைகளில் சிறந்து விளங்குகின்றனர். இருந்தாலும் ஆண்கள் பெண் களை சமமாகப் பார்க்கிறார்களா என்பது கேள்விக் குறியே? பெண்களைத் தெய்வமாகப் பார்க்கிறார்கள் அல் லது அவர்களை விட கீழே பார்க் கிறார்கள். அவர்களுடன் சமமாகப் பார்க் கும் எண்ணம் அவர்களுக்கு இன் னும் வரவில்லை எனக் கூறலாம். இதுதான் நான் ஆண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறேன். கற்றுக் கொடுத்துக் கொண்டும் உள்ளேன்’ எனக் கூறுகிறார் தேவிகா. தேவிகா திருமணம் செய்துகொள்ள வில்லை. தன் கலைப் பயணத்திற்கு இது மிகவும் உதவிகரமாகத்தான் இருந்திருக்கிறது என்று புன்னகைக்கிறார் தேவிகா.
‘ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி’ என்ற வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாய் வாழ்கிறார் வி.ஆர்.தேவிகா.