உங்க பெண்ணுக்கு எத்தனை வயது? கல்யாணம் ஆயிருச்சா? அட 25 வயசாகுது, ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலை? நீங்க பார்த்து வைச்ச கல்யாணமா? இல்ல லவ் மேரேஜா? இப்படி நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் கேள்வி தான் இவை.
ஆணும், பெண்ணும் ஒரு குடும்பம் என்ற கட்டமைப்பில் வாழ வேண்டும். மக்கட்பேறு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சமுதாயத்தில் உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறையே திருமணம். ஆனால், அந்தத் திருமணம் யாருடைய அனுமதியோடு நடக்கிறது? அதற்கு இச்சமூகத்தின் கட்டுப்பாடுகள், எதிர்பார்ப்புகள் எப்படிப்பட்டது என்பதை யோசிப்பது அதன் ஆழத்தைப் புரிய வைக்கும். பெண்கள் தமது உாிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தம் வீடு என்று வரும்போது தன் மகளின் அனுமதியும், விருப்பமும் எத்தனை வீடுகளில் கேட்கப்படுகிறது?
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் என்ைனப்பார்க்க வந்தாள். தன் வாழ்வில் திருமணம் என்றப் பெயாில் நடந்த கொடுமையை விவரித்தாள். கேட்டுவிட்டு சிறிதுநேரம் பேச முடியாமல் மௌனமாகிப்போனேன். அவர் 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் அவள் அக்காவிற்குத் திருமணம் செய்ய அவரது வீட்டில் நிச்சயித்து இருக்கிறார்கள். திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்த சமயத்தில் அவளது அக்கா அவள் விரும்பிய பையனைத் திடீரென கல்யாணம் செய்து கொண்டு போய் விடுகிறார். இந்தப் பெண்ணின் பெற்றோருக்கு என்ன செய்வது என்று தொியவில்லை.
அதற்கு மாற்றாக ஏதாவது செய்து களங்கத்தைப்போக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்க, 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியைத் திருமணம் செய்து கொடுக்கிறோம் எனக்கூறி அந்த மாப்பிள்ளை வீட்டாரை சம்மதிக்க வைக்கிறார்கள்.
இந்தப் பெண் எவ்வளவோ சொல்லியும் முரண்டு பிடித்தும் அவளது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. ஒரு வழியாகப் பதினேழு வயதில் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே பிடிக்காமல் போன திருமணம் இரண்டு பேரையும் பிரித்து வைக்கிறது. சுவற்றில் அடித்த பந்துபோல போன வேகத்தில் பெற்றோர் வீட்டிற்கு வருகிறாள். வாழாத குடும்பத்தில் பிள்ளை எப்படிப் பிறக்கும். இது தொியாத பையன் வீட்டார் வாரிசு வேண்டும் எனவே தம் மகனுக்கு மறுமணம் செய்யப்போகிறோம் என முடிவெடுக்கின்றனர். அதன்படி மறுமணம் செய்கின்றனர். ஆனால், இந்தப் பெண்ணோ தொடர்ந்து படிக்கிறார். டிப்ளமோ முடித்து பின்னர் பிஇ முடித்து பொறியாளர் ஆகிறாள்.
வாழ்க்கை என்றால் என்ன என்றே தொியாமல் ஒரு மணமுறிவு. தற்போது சென்னையில் வேலை. ஆனால், வாழ்க்கையில் உயர வேண்டும். என் குடும்பத்தார் என்னை வெறுக்கிறார்கள். வாழாவெட்டி எனக்கேவலப்படுத்துகிறார்கள். ஊருக்கு செல்ல முடியவில்லை. நான் சாதித்துவிட்டு சொந்த ஊருக்குப் போகலாம் என்றிருக்கிறேன் என்றார். இத்தனை காலம் அவள் பட்ட வேதனைகளை கிட்டத்தட்ட 2 மணி நேரம் விவரித்தாள். என்ன தவறு செய்தாள் அந்தப்பெண். 25 வயதில் இவ்வளவு மனஉளைச்சல் கொடுத்த பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் என்ன கூலி கொடுக்க முடியும். இது ஒருபுறம் இருக்க, ஒரு பெண்ணுக்கு கல்வி கற்பது கூட திருமண ஏற்பாடாகும் வரையுள்ள இடைக்காலத்தை நிரப்பும் செயல் என்றுதான் பல பெற்றோர் நினைக்கிறார்கள். ஊதியமின்றி உழைக்கும் வேலைக்காரியாய், சமையல் செய்து, இரவில் படுக்கைத்துணையாக இருக்கும் பெண்தான் மனைவி என்று கணவன் கருதுகிறான். தன்னுடைய அலங்காரம், குடும்பச் செலவுகளைப் பார்த்துக்கொள்ளக்கூடிய ஆணே சிறந்தவன் என அவள் சிந்திக்க மட்டுமே பெண்ணுக்கு போதனை செய்யப்படுகிறது.
ஜாதகத்தின் பெயரால், ராசியின் பெயரால், நட்சத்திரத்தின் பெயரால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இன்னும் மூல நட்சத்திரம், செவ்வாய் தோஷம் என்றெல்லாம் பார்த்து திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். ஆனால், திருமணத்திற்குத் தயாராகப் போகும் பெண்ணின் மன விருப்பமும், எண்ணமும் சிறிதேனும் மதிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். திருமணம் சிறந்ததுதான். ஆனால், மணமாகும் பெண்ணின் மனம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதே அதைவிடச் சிறந்தது.