சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட இழப்பால் சென்னை பெருங்குடியில் வசித்து வந்த லண்டனை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் மணிகண்டன், கடந்த ஆண்டு ஜன.2-ம் தேதி தனது மனைவி தாரக பிரியா மற்றும் மகன்கள் தாரன், தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலமாக மணிகண்டனுக்கு கிடைத்த வருவாய் மற்றும் இழப்பு, வருமான வரி பிடித்தம் தொடர்பான விவரங்களை வழங்கக் கூறி மும்பையை சேர்ந்த தனியார் ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான கேம்ஸ் 24 இன்ட் 7-க்கு கடந்த பிப்.24-ல் சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியது. இதேபோல அண்ணாநகரை சேர்ந்த ரகுவரன் என்பவரது மரணம் தொடர்பாகவும் அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த இரு நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரியும், அவற்றுக்கு தடை விதிக்கக் கோரியும் கேம்ஸ் 24 இன்ட் 7 என்ற நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்குகளில் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு தேவையான விவரங்களை வழங்கி ஒத்துழைப்பு அளித்துள்ள நிலையில், போலீஸார் பொதுவாக உள்நோக்கத்துடன் விசாரணையை மேற்கொண்டு வருவதாக நிறுவனம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கான தகவல்களைக் கோரி மட்டுமே சிபிசிஐடி நோட்டீஸ் பிறப்பித்துள்ளதால், தற்போதைய நிலையில் அந்த நோட்டீஸூக்கு இடைக்காலத்தடை விதிக்க முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு, டிஜிபி, சிபிசிஐடி போலீஸார் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 14-க்கு தள்ளி வைத்துள்ளார்.