சென்னை : வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோ அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக காவல்துறை வழக்கு பதிந்து வதந்தி பரப்பியோர் மீது கைது நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வதந்தி தொடர்பான விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், ‘புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் தொடர்பான பிரச்சனைகளில் மற்ற மாநிலங்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைக்க, அவர்கள் கோரும் தகவல்களை அளிக்க 5 போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
டிஜிபி அறிவுரை: இதற்கிடையே நேற்று போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வழங்கிய அறிவுரையில், பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்தும், தொழிலாளர்களின் பெயர், வயது, பாலினம் மற்றும் அவர்களின் சொந்த ஊர் குறித்தும் தகவல்களை சேகரிக்க வேண்டும். பிற மாநில தொழிலாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.