மதுரை: மதுரையில் 5 மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனைக்குப்பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- கலெக்டர்களின் உத்தரவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மக்கள் கோரும் சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். மக்கள் கொடுக்கும் மனுக்கள் காகிதங்கள் அல்ல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான வசதிகளை கேட்டு, அவற்றை நிறைவேற்றி தர மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தேவைகளை அரசுக்கு எடுத்துக்கூறி செயல்படுத்த முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். பழங்கள், காய்கறி விவசாயம் தொடர்பான வசதிகள் தேனி மாவட்டத்திற்கு தேவைப்படுகிறது.
மேலும், அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு கலெக்டர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளை அறிந்து கடமையாற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கும், அதற்கேற்ப புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும். தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும் தொழில்ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வேலை உறுதி திட்டங்கள் வகுத்துள்ளோம். அரசின் நோக்கத்தை உணர்ந்து அதிகாரிகள் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.