திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு நடந்து பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவற்றை காட்சிப்படுத்த அகழ் வைப்பகம், 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.11 கோடியே 3 லட்சம் செலவில் கட்டப்பட்டு இருக்கிறது. உலோக பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், பழங்கால கட்டிட மாதிரிகள், காதணிகள், தங்க பொருட்கள் ஆகியவற்றுக்கு தனித்தனி கட்டிடங்களுடன் இந்த அகழ் வைப்பகம் கட்டப்பட்டு உள்ளது. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள், 2600 ஆண்டுகளுக்கு முந்தயவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ் வைப்பகத்தை வருகிற 5-ந்தேதி மாலையில், நேரில் வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிடுவதுடன், காட்சிப்படுத்தப்பட்டுள்ள கீழடி அகழாய்வு பொருட்களையும் பார்வையிடுகிறார்.