புதுடெல்லி: 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பசுமை வளர்ச்சி குறித்த இணையவழி கருத்தரங்கில் வியாழக்கிழமை பேசிய பிரதமர் மோடி,கூறியதாவது: “பசுமை எரிசக்தித்துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நான் பங்குதாரர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு முதலீடு செய்ய வருமாறு அழைக்கிறேன். சூரிய ஒளி, காற்று, உயிரிவாயு போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளில் இந்தியாவின் திறன் ஒரு தங்கச் சுரங்கத்திற்கு நிகரானது.
இந்தியா 10 சதவீத எத்தனால் பயன்பாட்டு இலக்கை தான் திட்டமிட்டத்தை விட ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே எட்டிவிட்டது. அதேபோல், 9 ஆண்டுகளுக்கு முன்பே, 40 சதவீத பூமிக்கடியில் இருந்து பெறப்படும் எரிபொருள் திறனை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா பேட்டரி சேமிப்பு திறனை 125 ஜிகா வாட்ஸாக அதிகரிக்க இருக்கிறது. வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 500 ஜிகா வாட்ஸாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.