சானியா மிர்சா டென்னிஸின் மீதி அதிக ஆர்வம் கொண்டதால் , தனது சிறுவயதிலே டென்னிஸ் பயிற்சியைத் தொடங்கிவிட்டார். 18 வயதில் அதாவது 2003-ல் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுத்தார். பல போட்டிகளில் வெற்றி கண்டு இந்தியாவின் அசைக்க முடியாத டென்னிஸ் நட்சத்திரம் என்ற அடையாளத்தை ஈட்டினார்.
முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சானியாவுக்கு டென்னிஸ் விளையாட அவரது சமூகமே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதையெல்லாம் மீறி உலக அரங்கில் டென்னிஸ் ஜெயித்து தனது வெற்றியை நிலைநாட்டினர். தொடக்கத்தில் ஒற்றையர் பிரிவில் ஆர்வம் காட்டிய சானியா, அதன் பின்னர் தனது களத்தை இரட்டையர் பிரிவுக்கு மாற்றினார்.
சானியா, கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியின்போது தனது ஓய்வு முடிவை அறிவித்தார். துபாய் டூட்டி ஃப்ரீ ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறுவேன் என்று அறிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் துபாய் ஓபனில் மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீயுடன் பங்கேற்ற சானியா, முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
போட்டிக்கு முன்னதாக சானியா மிர்சா பேசியதாவது: பெண் குழந்தைகளாக பல்வேறு அழுத்தத்தை சமூகம் மூலம் நீங்கள் எதிர்கொள்வீர்கள். என் விஷயத்தில் நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலியாக இருந்தேன். என்னுடைய பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக நின்றனர். இளம் பெண்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் நினைப்பதை செய்யக்கூடாது என்று யாரும் உங்களை தடுக்க அனுமதிக்காதீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? என்று மற்றவர்கள் உங்களுக்காக முடிவெடுக்க கூடாது என்று கூறியுள்ளார்.
டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் சீசனுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வழிகாட்டியாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார். இனி ஆர்சிபி வீராங்கனைகளின் சிறந்த வழிகாட்டியாக சானியா திகழ்வார் என எதிர்பார்க்கலாம்.