தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க ஊரெங்கும் ஷாப்பிங் திருவிழாகளை கட்டியுள்ள நிலையில் ‘மாற்றியோசி’ என்பதற்கேற்ப சற்று வித்தியாசமாக தீபாவளியைக் கொண்டாடுபவர் மீரா கிருஷ்ணன். செய்தி வாசிப்பாளர், நடிகை, வீணை இசைக் கலைஞர் என இவருக்குப் பல பெருமைகள் உண்டு. இவர் வீட்டுத் தீபாவளி எப்படியிருக்கும் என்பதை அவரே கூறுகிறார்.
“நாங்கள் தீபாவளி பண்டிகையைப் பெரியளவில் கொண்டாட மாட்டோம். அந்த தினத்தில்தான் இறைவனை நினைக்க வேண்டும் என்பதில்லை, எல்லா நாட்களும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என நினைப்பவள் நான். அதேபோல் காசைக் கரியாக்கக் கூடாது என்பது எனது கொள்கை. என் பிள்ளைகளும் அதேபோல் தான். பட்டாசுகளைக் காசு கொடுத்து வாங்கி அதைக் கரியாக்குவதன் மூலம் என்ன கிடைத்துவிடப் போகிறது.
தீபாவளி பண்டிகை அன்று லஷ்மி பூஜை மட்டும் வீட்டில் ஸ்பெஷலாக செய்வோம். மற்றபடி பெரிய கொண்டாட்டமெல்லாம் எங்கள் வீட்டில் இருக்காது. இதை நான் தீபாவளிக்கென்று சொல்லவில்லை, பொதுவாகவே எந்தப் பண்டிகையையும் எளிமையாகத் தான் நாங்கள் கொண்டாடுவோம். எனது பிள்ளைகளும் பண்டிகை நாட்களை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டும் என நினைக்கமாட்டார்கள்.
எனது மகள் ஆர்கிடெக்ட் முடித்துவிட்டு மும்பையில் பணியாற்றி வருகிறார். இப்போது கொரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்து அவர் பணியாற்றுகிறார். மகன் இசையமைப்பாளராக வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு திரைத்துறை மீது ஆர்வம் அதிகம். சிறியளவில் ஒரு ஸ்டூடியோ அமைத்து குறும்படங்கள், ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து வருகிறார்.
எனக்கு இப்போதும் நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் வீணை இசைக் கச்சேரிகள் நடத்தி வருவதால் முழுமையாக என்னால் நடிக்க முடியவில்லை. சினிமா பாடல்களை வீணையில் வாசித்து வருகிறேன். இதற்கு நான் எதிர்பார்த்ததை விட பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு வரை திருமண வீடுகளில் வீணை இசை கச்சேரி வாசிக்க நானும் எனது கணவர் கிருஷ்ணாவும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தோம்.
இப்போது கொரோனா காலம் என்பதால் சற்று ஒய்வு கிடைத்துள்ளது. ஆனால் கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மன், கோவா என இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆன்லைன் மூலம் வீணை இசை பயிற்றுவிக்க கோரி வருகின்றனர். அதன் காரணமாக இப்போது தான் ஆன்லைன் கிளாஸ்களைத் தொடங்கியிருக்கிறேன். நல்ல முறையில் செல்கிறது, வீணையில் சினிமா பாடல்கள் வாசிக்க கற்றுக்கொடுக்குமாறு ஆர்வமுடன் கேட்கின்றனர்.
யாருக்கும் எப்போதும் துரோகம் நினைக்காமல், மனதில் வஞ்சகம் வைக்காமல் வாழ்ந்தாலே நமக்கு எல்லா நாட்களும் பண்டிகை நாட்களைப் போல் இனிதாக இருக்கும். பட்டாசுகளை வெடித்து பண்டிகை நாட்களை ஆடம்பரமாகக் கொண்டாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட மனசுத்தியுடன் இருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.”