செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் , திருவிடந்தை அருகே ,நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக பிக்கோ செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் முதலாவது ஹைப்ரிட் சவுண்டிங் ராக்கெட், டிடிடிசி ஓசோன் வியூவில் கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 8:15 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சவுண்டிங் ராக்கெட்டில் இருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள் மூலம் வானிலைநிலவரம், காற்றின் நச்சுத்தன்மை, மண் வளங்கள், ஆக்சிஜன், ஹைட்ரஜன் அளவு மற்றும் வளிமண்டல நிலை, கதிர்வீச்சு தன்மை குறித்த தகவல்களை பெற முடியும். ராமேசுவரத்தில் இயங்கும் அப்துல்கலாம் அறக்கட்டளை, மார்ட்டின் அறக்கட்டளை, பேஸ் ஜோன் இந்தியா அறக்கட்டளை இணைந்து, `டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023′-ஐ வெற்றிகரமாக செயல்படுத்தின. இதில் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது:-“முதலாவது ஹைப்ரிட் சவுண்டிங் ராக்கெட் ஏவும் திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதற்காக அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது:-“செயற்கைக்கோள் சார்ந்த தொழில் துறையில் உள்ள வாய்ப்புகளை மாணவ சமுதாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதே வேளையில் முதலாவது ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட்டை விண்ணில் ஏவியதற்கு பாராட்டுகள். ஒருமித்த கருத்து கொண்டவர்களின் கனவு இந்த சாதனையை நிஜமாக்கியுள்ளது. உலகஅரங்கில் இந்தியா விண்வெளி அறிவியலில் வேகமாக முன்னேறி வரும் நாடாக உள்ளது. எனவே, இளைஞர்கள் இத்துறைக்கு அதிக அளவில் வர வேண்டும்” என்றார்.