மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று சொல்லிவிட முடியாது . தங்கத்திற்கு மின்னுவதும் ஒரு குணமாகும் . தங்க நகைகள் வாங்குவது பரிசளிப்பதற்காகவும் , தனக்காகவும் இருக்கலாம். ஆனால், வாங்கும் போது பெரும்பாலானோருக்குக் குழப்பம் ஏற்படுவது இயல்பு.
இந்தக் குழப்பம் நீங்க , தங்கம் வாங்கும் போது சிலவற்றைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இது உங்களுக்குத் தரமான தங்க நகையை நியாயமான விலைக்கு வாங்க உதவும் . நீங்கள் உங்களுக்குப் பழக்கமான கடையில் வாங்கினாலும் சரி , இணையமூலம் (commodity exchange) மூலமாக வாங்கினாலும் சரி தங்கம் வாங்குவதற்கு முன்னால் தங்கம் பற்றிய அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். தங்கம் என்கிற வார்த்தை 24 கேரட், கட்டிப் பொன் என்பதையே குறிக்கும். ஆபரணப் பொன் என்று குறிப்பிடும்போது அது அதிகபட்சமாக 22 கேரட் தான் இருக்க முடியும். கட்டிப் பொன்னில் ஆபரணம் செய்ய முடியாது. தங்க ஆபரணத்தில் கேரட் குறிக்கும் போது, அதனுடன் சேர்ந்த மற்ற உலோகங்களைத் தவிர்த்துக் குறிக்கப்படுகிறது . உதாரணமாக 22 கேரட் எனக் குறிப்பிடும் போது 2 கேரட் மற்ற உலோகங்கள் சேர்ந்திருக்கின்றன என்று பொருள். 10 கேரட் தங்கம் என்று கூறி இருந்தால் மற்ற உலோகங்கள் 14 கேரட் இருப்பதாகப் பொருள்.
தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
4.நியாயமான விலை உள்ள நகைக் கடைகளையும், பாரம்பர்யம் மிக்க நகைக்கடை களையும் நாடிச் செல்லுங்கள்.
தங்கம் வாங்குவதற்கு முக்கிய தேவை நம்பிக்கை ஆகும். உங்கள் நகைக்கடைக்காரரிடம் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை உங்களுக்குத் தரமான தங்கம் கிடைக்க வழி செய்யும். ஆனால், சமீபத்தில் இந்திய தர நிர்ணய அமைப்பு (bureau of indian standards) நடத்திய ஆய்வின் போது நகையாளர்கள் பெரும்பாலானவர்கள் வஞ்சகமாக நடந்துகொள்வதாகப் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் தங்கம் வாங்கும்போது Hall Mark முத்திரை பதித்த தங்க நகைகளையே வாங்க வேண்டும்.
மனித வரலாற்றில் தங்கத்தின் கண்டுபிடிப்பு புகழ்வாய்ந்த ஒரு மைல்கல் ஆகும். இந்தியர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தங்கத்தின் பயனை அறிந்திருந்தனர் என்பது வடமொழி நூல்களாகிய வால்மீகி ராமாயணம் , மகாபாரதம் முதலியவற்றில் இருந்து தெரியவருகிறது. பண்டைய கால சிந்து சமவெளி, எகிப்து, மேற்கு ஆசியா, மெசபடோமியா நகரங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட தங்கப் பொருட்கள் அவர்களது தங்கத் தொழில்நுட்ப அறிவை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.
அரசர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடுவதற்காகத் தங்க நாணயங்களை வெளியிட்டார்கள். அதன் மூலம் அவர்கள் வாழ்ந்த காலத்தைச் சரித்திர ஆசிரியர்கள் நிர்ணயிக்கின்றனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தங்கத் தேடல் வேட்டை உச்சகட்டத்தை அடைந்தது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஏராளமான தங்கம் வெட்டி எடுக்கப்பட்டது. அவை கொலம்பஸ் காலத்தில் இருந்து அதுவரை வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தைவிட அதிகமாக இருந்தது.
தங்கத் தேடல் மூலம் கடல் போக்குவரத்து, நிலப் போக்குவரத்து வரலாறு காணாவகையில் பெருகியது. அமெரிக்காவில் நவீன நகரங்கள் உருவாயின.
இந்தியா, ஆஸ்திரேலியா நகரங்களிலும் தங்கத் தேடல் வேட்டை உந்துசக்தியாக இருந்து நவீன இயந்திரகளைக் கண்டுபிடிக்க உதவியது.
மற்ற எந்த நாடுகளையும்விடத் தங்கத்தின் பயன்பாடு இந்தியாவில் அதிகம். இதிகாச காலத்தில் இருந்து தங்க நகைகளைச் சாமானியர்கள் அணிந்து இருந்தனர் .தமிழ்நாடு, கேரளா, குஜராத், கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப தங்க நகைகள் பாரம்பரியமாகச் செய்யப்பட்டு வருகின்றன.
தங்கம் நகைகளுக்கு மட்டும் பயன்படாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. மக்கள் நீண்டநாள் வாழ தங்க பஸ்பத்தை உபயோகிக்கின்றனர்.
தங்கத்தை நூலாக இழைத்து அதைப் பட்டுடன் சேர்த்துச் சரிகை சேலை நெய்வது காஞ்சிபுரம் நெசவாளர்களுக்குப் பாரம்பரியமாக வந்த கலையாகும்.
சுரங்கங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், ஆற்றுப்படுகையின் அடியில் கிடந்தாலும் மலை முகடுகளில் மறைந்து கிடந்தாலும் மனிதன் தன் ஆற்றலினால் தங்கத்தைக் கண்டுபிடித்துவிடுகிறான். காரணம், அந்தத் தங்கத்தின் ஈர்ப்பு சக்தியான ஜொலிப்புதான்.
மக்கள் என்றுமே முதலீடு செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற பழமொழியின் படி இல்லத்தரசிகள் பணம் கிடைக்கும்போது தங்கம் வாங்குவதையே மிகவும் விரும்புகிறார்கள். காரணம், அன்றும் இன்றும் என்றும் அவசரத் தேவைக்கு எங்கும் தங்கம்தான். காகிதப் பணம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் எல்ல நாடுகளிலும் செல்லுபடி ஆகாது. ஆனால், எல்லா நாடுகளிலும் வீடுகளிலும் பணம் புழங்கும் இடங்களிலும் தங்கம் ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்தியக் குடும்பத்தில் குழந்தை பிறந்ததில் இருந்து மணவறை வரை நகைகள் செய்வது வாழ்க்கை முறையின் அங்கம் . காது குத்தும் பழக்கம், பெரும்பாலும் எல்லாச் சமூகத்தினர் இடையேயும் இருக்கிறது. மருத்துவ ரீதியாகவும், சீனாவின் அக்குபஞ்சர் வைத்திய முறையிலும் இது நன்மை பயக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தங்கத்தால் ஆன காதணி, வளையல், மோதிரம், அரைஞாண் கயிறு, சுட்டி போன்ற ஆபரணங்கள் குழந்தைகளுக்குப் போடும்பொழுது அதனை அந்தக் குழந்தைகளின் வருங்காலத்திற்கு முதலீடாகவும், தங்கத்துகள் உடலிற்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிலும் தங்கம் பயன்படுத்தப்படுகிறது .
தங்க ஆபரணங்களைப் பெரிதும் பயன்படுத்துவது பெண்கள்தான். மேலும், அந்த ஆபரணங்களை அடகுவைத்துக் கடன் வாங்கி முன்னேறுபவர்கள் பலர் உண்டு. அதுபோல் தங்கத்தை அடமானம் வைத்துக்கொண்டு பணம் கொடுக்கப்படும்போது வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும். ஏன் என்றால் கடன் கொடுப்பவருக்கு அசையாச் சொத்துக்களைவிட அசையும் சொத்தான தங்கம் மிகவும் நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. ஏனென்றல் அசையாச் சொத்துரிமையை நிர்ணயிப்பதற்குப் பல்வேறு முறைகளைக் கையாள வேண்டும். ஆனால், தங்கத்திற்கு இம்மாதிரி இல்லை.
சிலர் பொற்காசுகளைச் சேமிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிச் சேமித்த செல்வத்தை லட்சுமியாக வணங்குகின்றனர்.
வட நாடுகளில் தீபாவளியைத் தங்கம் வாங்கியே தொடங்குவார்கள். முதல் வரவு அவர்களுக்குத் தங்கமாகவே இருக்கும்.