ஒரு வகையில் நம் எல்லாருக்கும் நீச்சல் தெரியும் என்று சொல்லலாம். காரணம், நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்களைத் தினமும் எதிர் நீச்சல் போட்டுத்தானே கடக்கிறோம். ஆனால், வாழ்வின் கஷ்டங்களில் மட்டும் நீந்தாமல் ஆழ்கடலிலும் நீந்தி பத்ம விருது பெற்று உலக சாதனை படைத்தவர் ஆரத்தி சாஹா. இவர், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் 1940 செப்டம்பர் 24இல் பிறந்தார். சிறுவயது முதலே நீச்சல் என்றால் இவருக்கு ஆர்வம் அதிகம். ஆறு, குளம் என்று எந்த நீர்நிலையைக் கண்டாலும் அதில் குதித்து நீச்சல் அடிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை தோன்றும். அப்பா, ராணுவ வீரர். சிறு வயதிலேயே அம்மாவை இழந்துவிட்டார். நான்கு வயதில், தன் மாமாவுடன் ‘சம்பதாளா கேட்’ என்கிற இடத்தில் குளிக்கப் போனபோது நீச்சல் கற்றுக்கொண்டார். அன்று தொடங்கிய நீச்சல் பயிற்சிதான், 1959 செப்டம்பர் 29இல் அவரை உலக சாதனை படைக்க வைத்தது.
தெற்கு இங்கிலாந்துக்கும் வடக்கு பிரான்ஸுக்கும் இடையில் அட்லாண்டிக் கடலோடு இணையும் 560 கி.மீ. நீளமும், 240 கி.மீ. அகலமும் கொண்ட குட்டிக் கடல்தான் ஆங்கிலக் கால்வாய். கடுங்குளிரும் சுறா மீன்களும் ஜெல்லி மீன்களும் அலையும் அபாயகரமான நீர்ப்பரப்பு இது. இதில், மிகவும் தைரியமாக நீந்தி Mount Everest of Swimming என்று சொல்லும் அளவுக்குப் பெரும் சாதனை புரிந்தபோது இவருக்கு வயது 18 தான். சச்சின் நாக் என்பவரிடம் பயிற்சிபெற்ற ஆரத்தி, 1945-க்கும் 1951-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 22 மாநிலப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார்.
100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 200 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக், 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் போட்டிகளில் வென்று தேசிய சாதனை புரிந்து 1952இல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 200 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக்கில் போட்டிக்குத் தேர்வானார்.
பிரான்ஸின் கேப் க்ரிஸ் நெஸ்ஸிலிருந்து சேண்ட்கேட் வரை நீந்தி, 16 மணி 20 நிமிடங்களில் 42 மைல் (67 கிலோ மீட்டர்) தொலைவைக் கடந்து சேண்ட்கேட்டில் நமது இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். ஆரத்தியின் இந்தச் சாதனைக்காக 1960இல் இந்திய அரசு இவருக்கு பத்ம விருது வழங்கிக் கௌரவித்தது. அதுமட்டுமன்றி இந்தியத் தபால்துறை இவருக்கு சிறப்புத் தபால்தலை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது.
இது, இந்திய மற்றும் ஆசிய இளம் நீச்சல் வீரர், வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளித்தது. தனக்கு முன்பு சாதனை நிகழ்த்திய ஆண் நீச்சல் வீரர் மிஹிர் சென்னைத் தனது ரோல்மாடலாகக் கொண்டு சாதனை புரிந்தார், ஆரத்தி. 1994 ஆகஸ்ட் 23இல் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவர் மறைந்தபோதும் அவர் நீந்திக் கடந்த கடலில் அலைகள் என்றும் அவர் பெயரைச் சொல்லும்.