சென்னை: இந்தியா முழுவதும் 100 முக்கிய நகரங்களை தேர்ந்தெடுத்து அந்த நகரங்களை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றியமைக்க பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி சென்னை, ஆக்ரா, வாரணாசி, புனே, அகமதாபாத் உள்பட 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அங்கு ஸ்மார்ட் திட்டப் பணிகள் நடைபெற்று வந்தது. சென்னையில் ஸ்மார் திட்டப் பணிகள் 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. இதற்காக 1000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின்கீழ் சென்னையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. பாண்டி பஜார் பகுதிகள் வெளிநாடுகளில் உள்ளது போல் கட்டமைக்கப்பட்டது, அது மட்டுமின்றி பல அடுக்கு கார் பார்க்கிங், நீர் நிலைகள் மேம்பாடு, மழைநீர் வடிகால் பணிகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் விரைவாக செயல்படுத்தப்பட்டன. வில்லிவாக்கம் ஏரியில் சாக்கடை நீர் கலப்பதை தடுத்து அங்கு மழைநீர் சேமித்து தற்போது உயர் மட்ட கண்ணாடி மேம்பாலமும் , குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான நவீன பூங்காவும் சாந்தோமில் உருவாக்கப்பட்டது. பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் , இப்படி பல்வேறு பணிகள் முடிவடைந்த நிலையில் இப்போது ஒரு சில பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தின் பின்புறம் நவீன தொழில்நுட்ப சோலார் வசதிகளுடன் உருவாக்கப்படும் பசுமை கட்டிடத்தின் பணிகளும் இன்னும் 2 மாதத்தில் முழுமையாக முடிக்கப்பட்டுவிடும். அதேபோல் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லும் உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் இறங்கும் இடத்தில் ‘லிப்ட்’ அமைக்கும் பணிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளும் அடுத்த மாதத்தில் முடிந்துவிடும். இதேபோல் மாம்பலம் கால்வாய் தூர்வாரப்பட்டு அதை அகலப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதுபற்றி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட உயர் அதிகாரி கூறுகையில்:-“வருகிற ஜூன் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முடிவுக்கு வருவதால் அதற்குள் பணிகளை முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சென்னையை போன்று இந்தியா முழுவதும் 100 நகரங்களில் ஜூன் மாதத்துக்குள் இந்த திட்டம் நிறைவு பெறுகிறது. நகரங்களை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் திட்டப்பணிகள் நடைபெற்றதில் சென்னைக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை உள்ளிட்ட 22 நகரங்களிலும் இந்த திட்டப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.