நம் உடலிலேயே அதிக அளவு ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளக்கூடிய உறுப்பாக மூளை திகழ்கிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும்போதுதான் மூளை செல்கள் அழிவடைந்து அல்சைமர்ஸ் என்கிற ஞாபக மறதி நோய் ஏற்படுகிறது.
இதனை பாந்தோதினிக் அமிலம் சரிசெய்து மூளையின் நினைவாற்றலை அதிகப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் நினைவாற்றலை வலுவாக்க அன்றாட உணவில் சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசி யம். அந்த வரிசையில் கீழ்காணும் உணவுகளையும் பழங்களையும் நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன்மூலம் உங்கள் மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைத்து நினைவாற்றல் மேம்படும்.
பழங்கள்
ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரிப் பழம், முலாம்பழம், செவ்வாழை, பேரீச்சம்பழம், அன்னாசி போன்ற பழங்களைத் தினமும் நீங்கள் உணவில் ஒரு நேரம் சேர்த்துக்கொண்டால் உங்கள் நினைவாற்றல் மேம்படும்.
காய்கறிகள்
காலிபிளவர், கேரட், முட்டைக்கோஸ், பசலைக் கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை, கறிவேப்பிலை, பூசணிக்காய் போன்றவை நினைவாற்றலை வலுப்படுத்தும். பூசணியில் இருக்கும் ஆந்தோசயனின்களும் (Anthocyanins) மூளையின் ஆரோக்கியத்துக்கு உகந்தவை.
பருப்பு வகைகள்
பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ்.
இவை மட்டுமல்லாமல் பால், தயிர், அரிசி, சிவப்பரிசி, கவுணி, கோதுமை, கேழ்வரகு, மீன், மீன் எண்ணெய் போன்ற உணவு வகைகள் மூளையில் புதிய ரத்த செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன. அதேபோல முட்டையிலுள்ள கோலைன், ஃபோலேட், வைட்டமின் பி12 போன்றவை மூளைக்கு போஷாக்கை வழங்கக்கூடியது.
மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. எனவே, தினமும் பச்சையாக இரண்டு பல் பூண்டை உண்பது மிகவும் நல்லது. வெங்காயமானது ஃபோலிக் அமிலத்தின் நல்ல இயற்கை மூலம். ஃபோலிக் அமிலம் உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவைக் குறைப்பதன் மூலம் மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
இயற்கை இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதாலும் உங்கள் நினைவாற்றல் சக்தி அதிகரிக்கிறது. அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சளிலும் ஞாபக சக்தியை மேம்படுத்தக் கூடிய வேதிப் பொருள் ‘குர்குமின்’ இருப்பதால் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து அனைவரும் குடிப்பது மிகவும் நல்லது. அதோடு பசு நெய்யை உருக்கிப் பருப்புடன் சாதத்தை நன்கு மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது நிச்சயமாக மூளையின் நினைவாற்றல் அதிகமாகும்.