உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லாமல் ஆரோக்கியமான உடம்பைப் பெற வேண்டுமென்றால் வீட்டில் உள்ள வேலைகளை செய்தாலே போதுமானது என்று ஆலோசனை வழங்குகிறார் இயன் முறை சிகிச்சை (பிசியோதெரப்பிஸ்ட்) நிபுணர் சங்கீதா இயந்திரங்களையோ அல்லது ஆட்களை வைத்து செய்வதற்குப் பதிலாக நாமே நமது இடத்தை சுத்தம் செய்வது ஆரோக்கியமான உடம்பைப் பெறுவதற்கான வழிகள் என்று பரிந்துரைக்கிறார். இவ்வாறு செய்யும்போது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். இது தொடர்பாக தொடர்ந்து பேசியவர்…..
“நம்மிடமிருந்தே நமது பிள்ளைகள் நல்லது கெட்டது இரண்டையும் கற்றுக்கொள்கிறார்கள்.ஆரம்பத்தில் அதை ஒரு செயலாக நம்மைப் பார்த்துக் கிண்டல் செய்தாலும், பிறகு அதுவே அவர்களுடைய பழக்கமாகி விடுகிறது.நாம் செய்கின்ற செயல் நல்லவையாக இருந்தால் அது உடலுக்கும் மனதிற்கும் நல்லதொரு பயிற்சியாக அமைகிறது. நாம் அலுவலகத்தில் பணிபுரியும் பலரைப் பார்த்திருப்போம். அதில் சிலர் எந்த ஒரு செயலையும் நுணுக்கமாகவும், சீராகவும் செய்வதைப் பார்த்தால் அந்தப் பழக்கத்தை அவர்கள் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டதாக கூறுவார்கள்.அப்படிபட்டவர்கள் ஒரு ஸ்திரத்தன்மையோடு இருப்பதையும் காணலாம்.
அவ்வாறு இந்த ஸ்திரத்தன்மை உடலில் அனுமதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பல முக்கிய விஷயங்களில் முடிவெடுக்கும் போதும் அதே ஸ்திரதன்மையுடன் நிதானத்தை கடைபிடிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதனால் எவ்வளவு பரபரப்பான சூழ்லாக இருந்தாலும், நமது வீட்டில் இருக்கும் வேலைகளை நாமே செய்வதே உடலையும் மனதையும் புத்துணர்வோடு வைத்திருக்க உதவும்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு மருத்துவ முகாமில் கலந்து கொண்டபோது, நடுத்தர வயதுப் பெண்களை பலரை சந்திக்க நேர்ந்தது. அதில் பல பெண்கள் உடல் எடை அதிகரித்திருப்பது உடல் எடை குறியீட்டு எண் (Emty Mass Indes) மூலம் தொியவந்தது. இந்த உடல் பருமன் தீர்வாக வீட்டிலேயே சிறு சிறு பயிற்சிகள் செய்யலாம். குறிப்பாக
வேலைக்குச் செல்லும் பல பெண்கள் தங்களுக்கு நேரம் இல்லை என்று கூறுகின்றனர். உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று தான் குறைக்க முடியும் என்பது இல்லை.வீட்டில் உள்ள வேலைகளை செய்தாலே உடல் பருமனை குறைக்க முடியும். அவ்வாறு உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்றா நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமான உடலைப் பெற்றிருந்தார்கள். அதையெல்லாம் செய்யாமல் எப்படி நம் முன்னோர்கள் நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள்? இதை நாம் சிந்திப்பதில்லை
நமது அம்மாக்களுக்கும் பாட்டிகளுக்கும் வராத முதுகுவலி, மூட்டுவலி, மாதவிடாய் தொல்லைகளும் தற்போது இளமையிலேயே நம்மை தாக்குகிறது. அதற்குக் காரணம் உடலுக்கு பயிற்சி தராமல் கணினியில் அமர்ந்து இருப்பதே ஆகும். அதோடு வீட்டு வேலைக்கு ஆள் வைப்பது மற்றும் இயந்திரங்கள் துணை கொண்டு வேலை செய்வதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதோடு 20 வருடங்களுக்கு முன்பிருந்த உணவுப் பழக்க வழக்கங்களும் தற்போது காணாமல் போய்விட்டது. இதற்கு ஒரு சிறு உதாரணம், காலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கம் இருந்து வந்தது. அந்த பழக்கம் தற்போது அடியோடு காணாமல் போய்விட்டது.
அதிகாலையில் எழுந்து கோலமிடுவது உடலுக்கு நல்ல பயிற்சி. குறிப்பாக நீண்டநேர இரவு தூக்கத்திற்கும் பிறகு மூட்டுகளும், தசைகளும் சற்று இறுகிவிடும். அவற்றை சரி செய்ய வேண்டுமென்றால் குனிந்து நிமிர்ந்து எழ வேண்டும். அப்படி உடலுக்கு பயிற்சி கொடுக்க வேண்டுமென்பதால் தான் கோலமிடும் வழக்கத்தை நம் முன்னோர்கள் வைத்திருந்தனர். குனிந்து நிமிர்வதால் தசைகள் மற்றும் மூட்டுகள் தளர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்.
இன்றைய பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதைவிட அழகாக இருப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.முகஅழகு என்பது புற அழகைச் சார்ந்தது.ஆரோக்கியம் என்பது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் குறிக்கிறது.பெண்களுக்குப் பெரும்பாலும் கைப்பகுதி, தொடை மற்றும் இடுப்பு பகுதியிலும் கொழுப்பு தங்கிவிடுகிறது. அந்தக் கொழுப்பைக் கரைக்க உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்வதைவிட ,வீட்டிலேயே உள்ள வேலைகளை இயந்திரங்கள் உதவியின்றி, செய்தால் எளிமையாக உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்க முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக துணி துவைக்கும் போது கால்களை மடக்கி உட்காரும் போது உடலுக்குப் பயிற்சி அளிப்பதோடு மூளைக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
அதேபோன்று ஊசியில் நூல் கோர்த்து தையல் வேலைகளை செய்வதன் மூலம் கைகளில் உள்ள சிறிய சிறிய தசைகள் வலு பெறுகிறது. குறிப்பாக தையல் வேலையில் ஈடுபடும்போது Hand – Eye Co-ordination அதிகமாகிறது. Hand Eye Co-ordination நல்லமுறையில் செயல்படும்போது மூளையின் இதரப் பகுதி தூண்டப்பட்டு, மற்றவர்களைவிட நம்மால் வேமாக சிந்திக்கவும் செயல்படவும் முடிகிறது.அதேபோன்று வீட்டைச் சுத்தமாகத் துடைக்கும்போது குனிந்து நிமிர்வதால் தசை இறுக்கம் குறைந்து, தசைகளின் சுருங்கி விரியும் தன்மை (Flribility) அதிகரிக்கிறது. அதேபோன்று தண்ணீர் குடங்களை இடுப்பில் தூக்கி சுமந்து நடப்பதன் மூலம் இடுப்பு எலும்புகள் வலுவடைவதோடு தேவையில்லாத தசைகள் குறைந்து இடுப்பு பகுதி ஆரோக்கியம் பெறுகிறது. உடற்பயிற்சிக் கூடங்களுக்கு சென்று நேரத்தை வீண் செய்வதைவிட வீட்டிலேயே உள்ள வேலைகளை ஆரோக்கியம் பெறலாம்.” என்றார் சங்கீதா