சென்னை: மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அங்கு சென்று தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த மூலக்கொத்தளம் வந்தார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று தாளமுத்து நடராஜன், தர்மம்மாள் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் :- அன்னை தமிழைக் காக்க உயிர்த்தியாகம் செய்த நூற்றாண்டுக்கான மொழிப்போர் ஈகியர்களின் நாள் இந்நாள். இந்த நாளில் அவர்களின் ஈகத்தை போற்றுவோம். 500-க்கும் மேற்பட்ட ஈகியர்கள் தங்களின் இன்னுயிரை ஈந்து, இந்தியிடமிருந்து மீட்டெடுத்த அன்னை தமிழின் இன்றைய நிலை வேதனை அளிக்கிறது. ஒருபுறம் இந்தியும், சமஸ்கிருதமும் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் நிலையில், மறுபுறம் தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு அரியணையும் இல்லை என்று கூறியுள்ளார்.