சென்னை, ராயபுரம், க்ளைவ் பேட்டரி பகுதியின் சேரி… குப்பையும் சகதியுமாய் கலந்து ஓடும் குறுகிய தெருக்களில் நெருங்கித் தவிக்கும் சின்ன வீடு ஓன்றில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மெல்லியதாய் ஒலித்துக்கொண்டிருந்த ஒரு சிறுமியின் பாட்டுக் குரல் இன்று உலகை தன்வசப்படுத்தியிருக்கிறது.
இசைவாணி அன்ற அந்தச் சின்னப்பெண் இன்று உலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து 24 வயது இளம் நட்சத்திரமாக ஒளிர்கிறார். பி.பி.சி. வரிசைப்படுத்தியிருக்கும் 2020ஆம் ஆண்டுக்கான உலகின் ஆளுமை மிக்க 200 பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இசைவாணி.இசைவாணி பத்தாவது படித்திருக்கிறார். அதற்கு மேல் படிக்க அவருடைய குடும்ப நிதி நிலைமை இடம் கொடுக்கவில்லை. அவருடைய அண்ணன் இசைவாணனும் பத்தாவதுதான் படித்தார். அவருடைய தந்தை சிவகுமார் ஒரு தொழில்முறை இசைக் கலைஞர். துறைமுகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். ‘என் அப்பாவின் இசை ஆற்றல்தான் எனக்குள்ளும் ஊறி வளர்ந்திருக்கிறது’ என்று புன்னகை பூக்கிறார் இசைவாணி. ‘பாடல் பாடி பெரிய ஆளாக வர வேண்டும் என்பது பதிமூன்றாவது வயதில் எனக்கு லட்சியமாக வளர்ந்தது’ என்று தெரிவிக்கிறார் இசைவாணி. கானா பாடல் களத்தில் பெண்கள் இருப்பதில்லை. அது முழுக்க முழுக்க ஆண்களுக்கான உலகமாகவே இருக்கிறது. இருந்தாலும் ஒரு சிறு பாத்திரம் தனக்கும் கிடைத்துக்கொண்டிருந்தது என்று இசைவாணி கூறுகிறார்.
அந்தச் சமயத்தில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் ‘Castless Collective’ என்ற இசைக்குழுவில் தன் திறமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார் இசைவாணி. மூன்று ஆண்டுகளாக இந்தக் குழுவோடு பயணிக்கிறார் அவர்.கானா பாடல்கள் வட சென்னையின் தனி அடையாளமாக இருந்தன. மரண வீட்டுப் பாடலாக ஒலிக்கத் தொடங்கிய கானா பாடல்கள் சமூக அவலங்களைச் சொல்லவும் காதல் துயரங்களை வெளிப்படுத்தவும் சரியான வடிவங்களாக மாறின. அரசியல் முரண்களைப் பாட்டாக்கி விழிப்புணர்வு பெற வைப்பதும் கானா வடிவத்தின் முக்கியப் பொருளாக இருந்துவிடுகிறது. தன் இசைக் கச்சேரிகளில் எப்படி அரசியல் நெடிகளை இயல்பாக இசைவாணி வெடிக்க வைக்கிறார் என்று கேட்டால் சற்று எரிச்சல் அடைந்துவிடுகிறார் இசைவாணி. ‘இது அரசியல் நெடியோ வெடியோ இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள் இயல்பாக வெளிப்பட்டுவிடுகின்றன. விளிம்பு நிலை மனிதர்களின் வலிகளையும் வேதனைகளையும் தயாரித்து அளிக்க வேண்டியது இல்லை’ என்று கொதிக்கிறார் அவர். ஜாதிய ரீதியாக, சமூக ரீதியாக மக்கள் ஒதுக்கப்படுவதால் அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று கூர்மையாகப் பேசுகிறார் இசைவாணி. இது மட்டும் இல்லாமல் பெண் என்பதாலும் ஒடுக்குமுறை நடக்கிறது என்று சொல்கிறார் அவர். பிபிசி அங்கீகாரம் மூலம் பல தளங்களிலிருந்து இசைவாணிக்குப் பாராட்டுகள் குவிகின்றன. இசைஞானி இளையராஜாகூட அவரை அழைத்துப் பாராட்டினார். அது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்று புல்லரிக்கிறார் அவர்.
பிபிசி கொடுத்த அங்கீகாரம் மூலம் முதலில் கானாவுக்குப் பெருமை, தன் இசைக் குழுவுக்குப் பெருமை என்று சொல்கிறார் அவர். பண வசதி பெற வேண்டும், புகழ் பெற வேண்டும் என்று தன் இசைப்பயணத்தை இசைவாணி தொடங்கவில்லையாம். ‘ஒடுக்கப்பட்டவர்கள், பாலியல் ரீதியாக ஒதுக்கப்படுபவர்கள் என்று சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் இருப்பவர்களுக்குமாக போராட வேண்டும். அவர்களின் பிரச்சனைகளுக்கு, வலிகளுக்குத் தீர்வு காண வேண்டும். நான் அந்த இலக்கை நோக்கித்தான் போகிறேன்’ என்று உறுதி காட்டுகிறார் அவர். எத்தனை அங்கீகாரம், வசதி போன்றவை கிடைத்தாலும் தன் வாழ்வு தான் வளர்ந்த இடத்தில்தான் இருக்கும் என்று புன்னகைக்கிறார் அவர். ‘இந்த இடம்தான் எனக்கு அடிப்படையைக் கொடுத்தது. ஆற்றலைக் கொடுத்தது. அங்கேயே இருந்துகொண்டு சேவை செய்ய வேண்டும்’ என்று அவர் கூறுகிறார். கானா என்ற பாடல் முறையை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான ஒரு இசை வடிவமாகப் பார்க்காமல், இது அனைத்துச் சமூகத்தின் கலை தாகத்திற்கான வடிகாலாக மாற்ற வேண்டும் என்று இசைவாணி கருதுகிறார். ‘எனக்குக்கூட கானா இசைவாணி என்றுதான் அடையாளம் கிடைத்திருக்கிறது’ என்று அவர் கூறுகிறார். இசைவாணி பணியாற்றும் இசைக்குழுவில் அனைவரும் ஆண்கள்தான். அவர்கள் இவரை மேலாண்மை செய்ய முயல்கிறார்களா என்று கேட்டால், ‘யாரும் அப்படி நினைப்பதாகத் தெரியவில்லை. அப்படி அவர்கள் நினைத்தால் நான் அவர்களுக்குப் போட்டியாகவும் பாடி பாராட்டு பெறுவேன்’ என்று பலமாகச் சிரிக்கிறார் இசைவாணி.
முறைப்படி இசை கற்றுக்கொள்ளாத இசைவாணி, தின வாழ்வே இசையைக் கற்றுக்கொடுத்துவிடுகிறது என்கிறார். பாடுவதற்காக இசைவாணி எந்தப் பயிற்சியும் செய்வதில்லையாம். தன் இசைக்குழுவின் பயிற்சியாளர் டென்மா தொடர்ந்து பயிற்சி தருகிறார் என்று அவர் தெரிவிக்கிறார். இதுவரை இசைவாணி நாடோடிகள்-2 உட்பட சில படங்களில் பாடியிருக்கிறார். இன்னும் பல படங்களில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘நிறைய திரைப்படங்களில் பாட வேண்டும். இந்தத் துறையில் நிறைய பெண்கள் வர வேண்டும். சமூகத்தின் அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதுதான் என் இலக்கு, லட்சியம் எல்லாம்’ என்று கண்களில் ஒளி தெரியக் கூறுகிறார் இணைவாணி. திரைப்படங்களில் அதிகம் பாடத் தொடங்கினால் சமூக விழிப்புணர்வு மழுங்கிப் போகாதா என்று கேட்டால், ‘இசை என்பது என் வேட்கை. என் சமூகத்தின் விடியலுக்கானது என் போராட்டம். திரைப்படப் பாடல்களில் எனக்குத் தனி அடையாளம் கிடைத்தால் அதன் மூலம் என் இலக்கு எளிமை அடையும்’ என்று தன் முடிவைப் பதிவு செய்கிறார் இசைவாணி.