சேலம்: தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு அரசு பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது: பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் முதல்-அமைச்சரின் உன்னதமான திட்டம். இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 54 பள்ளிகளை சேர்ந்த 5444 மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். முதல்-அமைச்சர் அறிவித்தபடி 2023 -2024 -ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தால் மாணவர்கள் கல்வி திறன் அதிகரித்துள்ளதுடன் மாணவர்கள் வருகையும் அதிகரித்துள்ளது.
முதல்-அமைச்சர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இருந்தே இங்கு தயாரிக்கப்படும் உணவு கொண்டு செல்லப்படும் விதம், மாணவர்களுக்கு சாப்பாடு வழங்குவது உட்பட அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களையும் பள்ளியில் சேர்த்து இந்த திட்டத்தில் பயனடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.