பெண்கள் அரசியல் பேசவே தயங்கும் காலகட்டத்தில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறித்து எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி அவர்கள் பெண்களின் குரலுக்கு அளித்த பேட்டி.
கேள்வி : உங்களது அரசியல் பயணம் எந்த வயதில் தொடங்கியது?
பதில் : சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையும், அரசியல் உணர்வும் எனக்குப் பள்ளியில் படிக்கும்போதே ஆசிரியர்கள் மூலமாக ஏற்பட்டது. அதன்பின் கல்லூரி முடித்த பின்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மூலமாக அரசியலில் அடியெடுத்து வைத்தேன்.
கேள்வி : நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் உங்கள் சட்டமன்ற அனுபவம் எப்படி இருந்தது ?
பதில் : 15 வருடங்களாக சட்டமன்றத்தில் பணியாற்றி இருக்கிறேன். சட்டமன்றத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன. அதில் குறிப்பாக பெண்கள் ஆணையத்தை சட்டமாக மாற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தினோம், அந்த மசோதா வந்தது. அது சட்டமானது. அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்களில் கடைக்கோடியில் உள்ள அருந்ததி இன மக்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதுவும் சட்டமாக நிறைவேற்றப்பட்ட காலமாக அது இருந்தது.
அதேபோல் புயல், மழைக்காலங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்படும்போது, அரசு சார்பில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். ஆனால், அந்த உதவித்தொகை மீனவப்பெண்களுக்கு வழங்கு வதில்லை. பெண்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதில்லை என்ற காரணத்தால் அவர்களுக்கு அந்த உதவித்தொகை வழங்கப்படாமல் இருந்தது. மீன்களை வாங்கி தெருக்களில், கடைகளில் விற்பனை செய்கின்றனர். அதனால் அவர்களும் மீனவப்பெண்கள்தான். எனவே, தடை செய்யப்பட்ட அந்த காலகட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகையை மீனவப்பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினோம். அதை அரசு நடைமுறைப்படுத்தியது.
அதேபோல் அரசுப்பணியில் இருக்கும் திருமணமான ஆண் இறந்தால் அவரது துணைவியாருக்கு அந்தப்பணி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதே பெண் மறுமணம் செய்தால், அவருக்கு வழங்கப்பட்டு வந்த பணி பறிக்கப்பட்டு வந்தது. இதை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதையும் அரசு நடைமுறைப்படுத்தியது. அதேபோல் முதியோர் உதவித்தொகை அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி முதியோர் உதவித்தொகை பெறும் முதியோருக்கு ஆண் வாரிசுகள் இருக்கக் கூடாது. ஆண் வாரிசு உள்ள முதியோர்கள் எல்லோரும் பாதுகாக்கப்படுகிறார்கள், பராமரிக்கப்படுகிறார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. ஆண் வாரிசு மட்டுமே வாரிசு என்ற முடிவுக்கு நாம் எப்படிச் சொல்வது. பெண்ணும் வாரிசுதான் என்று ஒரு விவாதம் வந்தது. அதன் பின்பு அரசு ஆணையில் இருந்து ஆண் வாரிசு, பெண் வாரிசு என்பதை எடுத்துவிட்டார்கள். ஆண் வாரிசு இருந்தாலும் கொடுக்கலாம் என்ற மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். ஆண்தான் வாரிசு என்ற பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டியதில் என்னுடைய பங்களிப்பு இருந்தது.
கேள்வி : தமிழக அரசியல் களம் எப்படி உள்ளது? பெண்கள் அரசியலுக்கு வரலாமா?
பதில் : ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் இந்திய நாட்டின் அரசியல் களம் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக, மதம் என்பது அரசியலில் ரொம்ப தீவிரமாகப் புகுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களுக்கான உாிமை, மாநில அரசுக்கான உாிைம என்ன என்று பார்த்தால் விரல்விட்டுச் சொல்லும் அளவுக்குக்கூட இல்லை என்பது என்னுடைய கருத்து.
நான் 15 ஆண்டுகாலமாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனுபவத்தில் சொல்வது என்னவென்றால், மாநில அரசு சுதந்திரமாக, சுயேட்சையாக செயல்படுவதற்கான அதிகாரமே இல்லை. எல்லாமே மத்திய அரசின் கைகளில் உள்ளது.
உாிமைகளைப் பாதுகாக்கக் கூடிய, மீட்டெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை மாநில அரசு செய்யவில்லை. மாநில அரசே செய்யவில்லை என்றால் மக்கள் எப்படி உறுதுணையாக இருப்பார்கள். மாநில அரசே உாிமைகள் பறிபோவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது, மக்கள் தங்களுடைய உாிமைகள் பறிபோவதுகூடத் தொியாமல் இருக்கிறார்கள். ஆகவே இது மிக மோசமான, மிக நெருக்கடியான அரசியல் சூழலாக இருப்பதாக நான் பார்க்கிறேன்.
கேள்வி : பெண்களின் அரசியல் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் ?
பதில் : பெண்கள் அரசியலுக்கு வராத காலகட்டம் எது என்று எனக்குத்தொியவில்லை. விடுதலைப் போராட்டத்தில் ஆண்களுக்கு சமமாகத்தான் பெண்கள் களத்தில் இருந்தார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு செய்துபார்த்தால் தொியும். எழுதப்பட்ட வரலாற்றில் பெண்களின் பங்கைப்பற்றி சித்தரிக்கவில்லை.
பெண் என்கிற பாரபட்சத்தில் வரலாற்று ஆசிரியர்கள் செய்த மிகப்பொிய குற்றம் இது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கூட பெண்களின் பங்களிப்பை சரியாகச் சொல்லவில்லை. கஸ்தூரிபாய் கூட உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு பின்னர்தான் இறந்தார். ஆனால், காந்தியை சித்தரிக்கிற அளவுக்கு கஸ்தூரிபாயை சித்தரிப்பதில்லை. காந்தியடிகளின் மனைவி என்றுதான் சித்தரிக்கிறார்கள். ஜவஹர்லால் நேருவைப்பற்றிக் கூறும்போது, அவரது சகோதரி, தாய் அவர்கள் எல்லோரும் அடுத்ததாகத்தான் வருகிறார்கள். பொிய அரசியல் பின்னணியில் இருந்து வந்த பெண்களுக்கே இந்த நிலைமை.
விடுதலைப் போராட்டக்காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக சரிசமமாகப் பங்கெடுத்திருக்கிறார்கள். அதேபோல அரசியல் அமைப்பு சட்டத்தை நிர்ணயிக்கும்போது, அண்ணல் அம்பேத்கர் குழுவில் பெண்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றியதில் பெண்களின் பங்கு இருந்ததை யாரும் பேசுவதில்லை. அரசியல் அமைப்பு சட்டம் இயற்றியதில் இருந்து பெண்களுக்கான பல்வேறு வகையான சட்டம் அதாவது, தேவதாசி முறை, குழந்தை திருமணம் எதிர்ப்பு, விவாகரத்து பெறுவதற்கான உாிமை, வேலைக்குச் செல்வதற்கான உரிமை போன்ற பல்வேறு சட்டங்களைப் பெண்களுக்குக் கொண்டு வந்து சேர்த்ததில் பெண்களுக்கு மிகப்பொிய பங்களிப்பு இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாகத்தான் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பெண்கள் பங்கேற்கலாம் என்று இருந்தது இப்பொழுதுதான் 50 சதவீதமாகப் பங்கேற்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களின் பங்கேற்பு என்ன? வாக்காளர்கள் என்று எடுத்துக்கொண்டால் பல்வேறு தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்ற இந்திய நாட்டில் பெண்களால் தேர்ந்தெடுக்கப்படும் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை என்ன? கடந்த 25 ஆண்டுகாலமாக 33 சதவீத இடஒதுக்கீட்டை சட்டமாக்காமல் இந்த அரசு வைத்துள்ளது. அதற்கு என்ன காரணம்? பெண்ணைப்பற்றிய தாழ்வான மனப்பான்மை. பெண் அரசியலுக்கு வரக்கூடாது என்கிற ஆணாதிக்கச் சிந்தனை.
கேள்வி : அரசியல் களத்தில் உங்களுடைய எதிர்காலத்திட்டம் என்ன?
பதில் : எதிர்காலத்திட்டம் என்பது இன்றைய அரசியல் காலகட்டத்தில் மிகப்பொிய மாற்றத்தை உருவாக்க வேண்டும். இன்றைக்குப் பெண்களுக்கான உயர்கல்வி பறிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு முன்பு கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய மாணவிகளின் மருத்துவக் கல்வி கனவு நிறைவேறியது. ஆனால் நீட்தேர்வுக்குப் பின் அந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆகவே கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு, மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டிய சூழல் உள்ளது.
பெண்களுக்கு நிறைய சலுகைகள், உாிமைகள் கொடுத்து வந்தார்கள். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்குக் கொடுத்து வந்த மகப்பேறு விடுப்பைத் தற்போது கொரோனா காலத்தில் அந்த சட்டத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டது மத்திய அரசு. பெண் தொழிலாளர்களுக்குக் கொடுத்து வந்த உாிமைகள் மறுக்கப்படுகின்றன. மத்திய அரசு அலுவலகங்களில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த பெண்கள் எல்லாம் விருப்ப ஓய்வு திட்டத்தில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக் கீடு என்பது மத்திய, மாநில அரசு அலுவல கங்களில் அமலாக்கப் படுகிறதா என்றால் கிடையாது. கல்வி நிறுவனங்களிலும் 30 சதவீதம் பெண்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுகிறார்களா என்பதையும், பெண்களுக்கான இடஒதுக்கீடு அமலாக்கப்படுகிறதா என்பதையும் கூறி ஒவ்வொரு பெண்கள் அமைப்புகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. மதவெறி அரசியல் எல்லாவற்றையும் பாழ்படுத்தும், சீரழிக்கும். அதை எதிர்த்து அரசியல் செய்வது என்பது மிக மிக முக்கியமான தேவை. அதற்கான போராட்டக்களத்தில் பெண்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா காலகட்டத்திலும் பெண்கள் பல போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
கேள்வி : அரசியலுக்கு வர நினைக்கும் இளம் பெண்களுக்கு உங்களது அறிவுரை என்ன?
பதில் : இளம் பெண்கள் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும். இன்றைய பெண்கள் ராணுவத்திலும், விண்வெளி ஆராய்ச்சியிலும், கப்பல்படையிலும் ஒவ்வொரு துறையிலும் இருக்கிறார்கள். காவல் துறையில் இருந்து கல்வித்துறை வரை எல்லா துறையிலும் பெண்கள் இருக்கிறார்கள். எனவே அரசியல்துறையை ஏன் புறக்கணிக்க வேண்டும்.
ஆகவே, இளம் பெண்கள் அரசியல் துறைக்குக் கட்டாயமாக வரவேண்டும். வந்தால்தான் அங்கே இருக்கக்கூடிய ஆணாதிக்கம் என்பதை உடைக்க முடியும். அரசியல் சட்டம், உாிமைகள் பல வழங்கியும் கூட நமது உாிமைக்காகத் தெருவில் வந்து போராடவில்லை என்றால் நாம் பெற்ற சுதந்திரத்தை இழந்துவிடுவோம். ஆகவே, இன்று பெண்கள் கட்டாயமாக அரசியல் களத்திற்கு வரவேண்டும். சமூக மாறுதலுக்காகவும், உாிமைக்காகவும் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். தனிநபர் துதிபாடும் அரசியலைத் தூக்கி எறிய பெண்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும்.