சென்னை: கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரிக்கும் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பூவுலகின் நண்கள் அறிக்கையில் :- தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கடற்கரையோர கனிம வளங்களை குறிப்பாக, கார்னட் (Garnet), இலுமினைட் (Ilmenite), ஜிர்கான் (Zircon), ரூட்டைல் (Rutile) போன்ற கனிமங்களை பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு கனிம நிறுவனமும், ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனமும் இணைந்து ஓர் புதிய நிறுவனம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கடலோர கனிமங்களை பிரித்தெடுக்கவும், அதனை மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களாக மேம்படுத்தவும், அதன்மூலம் அணுசக்தித் துறைக்கு தேவையான முக்கியமான கனிமங்கள் கிடைக்க செய்வதுடன் பிற தொழில்களுக்கு இதர கனிமங்கள் கிடைக்கப்பெற வாய்ப்பும் உண்டாகும் என தமிழக அரசு கூறியுள்ளது.
அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேரிக்காடுகள் பார்ப்பதற்குப் பாலைபோலத் தெரிந்தாலும் அது மிகுந்த சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அமைவுகள் ஆகும். தேரி நிலத்தில் உள்ள பொறை மண், மழைக்காலங்களில் தண்ணீரை முழுவதுமாக ஊடுருவச் செய்து உள்வாங்கிக்கொள்கிறது. இதன் காரணமாக அதிகளவில் மழை பெய்தாலும் அவை வழிந்தோடி வீணாகாமல் சேகரிக்கப்படுகிறது. பொறை மண்ணுக்கு அடியில் இருக்கும் காய்ந்த களிமண் பரப்பும் அதற்கு அடியில் இருக்கும் சுண்ணாம்புப் பாறையும் மழைநீரை நிறுத்தி வைத்து தேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்கின்றன.
இந்த நிலையில் நம்மால் எவ்வளவு தூரம் இயற்கை அமைவுகளை சிதைக்காமல் பாதுக்காக்க முடியுமோ அதற்குண்டான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம். ஆனால், தமிழக அரசின் மேற்கண்ட முடிவு சூழல் பாதுகாப்பிற்கு முற்றிலும் எதிரானதாகும். ஆகவே, தமிழகத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான தேரிப்பகுதி மற்றும் தீவிர கடலரிப்பைச் சந்தித்து வரும் தென்மாவட்ட கடலோரங்களின் இயற்கை அமைவுகளைச் சீரழிக்கும் முயற்சிகளை தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளனர்.