சென்னை: காணும் பொங்கல் கொண்டாட்டம் இன்று களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர். மெரினா கடற்கரையில் இன்று காலை 9 மணியளவில் இருந்தே மக்கள் கூட தொடங்கினர். இதனால் திரும்பிய திசையெல்லாம் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது. மெரினா கடற்கரையில் கூட்ட நெரிசலால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 15 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களிலும் தலா 3 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்காலிக உதவி மையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.
கிண்டியில் சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்காவில் காலை 8 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. எலியட்ஸ் கடற்கரையில் சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. மாலை நேரங்களில் அங்கு அமைக்கப்பட்டு உள்ள மேடையில் கலைஞர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.