சென்னை: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (ஜன.16) துவக்கி வைத்தார். இம்மாதம் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் மலேசியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், அமெரிக்கா என 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்: “சர்வதேச அளவில் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் இந்தப் புத்தகக் காட்சியில் பங்கேற்றுள்ளனர். ஜப்பான், மலேசியா பல நாடுகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாடுகளிலிருந்தும், அவர்களின் நாட்டில் பிரபலமான நூல்களை கொண்டு வந்துள்ளார்கள். நேரில் பங்கேற்க இயலாத வெளிநாட்டு எழுத்தாளர்கள் காணொலி மூலம் உரையாடும் நிகழ்வுகளும் உள்ளன.
தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். 30 முதல் 50 தமிழ்ப் புத்தகங்களை வெளிநாட்டு மொழிகளுக்கு மொழிப்பெயர்க்க திட்டமிட்டுள்ளோம். அதேபோன்று மற்ற நாடுகளைச் சார்ந்த நூல்களையும் தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.