day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜனநாயக நெறியில், சட்டத்தின் மாண்பு காத்து, மாநிலத்தின் உரிமையைச் சட்டப்பேரவையில் நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் பொங்கல் விழா தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் சுய மரியாதையைச் சட்டசபையில் தி.மு.கழகம் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிலைநாட்டியிருக்கிறது. சட்டசபையின் மாண்பையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் காக்கின்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள அறவழியிலான போராட்டத்தை மேற்கொண்ட காரணத்தால், இந்தப் பொங்கல் விழா நமக்குக் கூடுதல் இனிப்பு நிறைந்த சர்க்கரைப் பொங்கலாக அமைந்துள்ளது. அந்தச் சுவை, தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் பொங்கும் பொங்கலிலும் இடம்பெற்று, அவர்களின் உள்ளமெலாம் இனித்திட வேண்டும் என்பதற்காக ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு. இந்த முறை அந்தக் குறையும் சிறிதும் கூட இருக்கக்கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டு ரொக்கத் தொகையுடன் தரமான பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் உழவர்கள் மற்றும் தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று முழுக் கரும்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9-ம் நாள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் முறைப் படித் தொடங்கி வைத்தேன். அப்போதே மக்களின் மனத்திலும் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குவதை நேரில் கண்டு களிப்புற்றேன். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற பேரறிஞர் அண்ணா வழியில், எல்லாருடைய முகத்திலும் புன்னகையைக் காண முடிந்தது. பொங்கல் திருநாளை நமது பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்தையே சாரும். தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் “இதுதான் தமிழர் திருநாள்” என மக்களின் மனதில் பதிந்திடும் வகையில் சிறப்பான கொண்டாட்டத்தை முன்னெடுத்தனர். பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பொங்கல் விழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுக் கலை விழாவாக ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ நடைபெறுகிறது. பாரம்பரியக் கலைகளைப் பேணிக் காக்கும் தமிழ்நாட்டுக் கலைஞர்களைச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து இதனை நடத்துகிறார் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற மக்களவைக் குழுவின் துணைத் தலைவருமான அன்புத் தங்கை கவிஞர் கனிமொழி கருணாநிதி. சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக இலக்கியச் சங்கமம் என்ற நிகழ்வும் நடைபெறுகிறது. பன்னாட்டுப் புத்தக விழாவுடன் கூடிய சென்னைப் புத்தகக் காட்சியும் நடைபெற்று வருகிறது.

முத்தமிழையும் முக்கனிச் சுவை போல வழங்கி வருகின்றன தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள பொங்கல் விழா நிகழ்ச்சிகள். தலைநகரில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வீர விளையாட்டுகள், கலை விழாக்கள், இலக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறத் தொடங்கியுள்ளன. அயலகத் தமிழர் நாளில், கடல் கடந்து வாழும் தமிழர்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் ஆகியவை உலகெங்கும் வாழும் தமிழர்களை உணர்வால் இணைக்கும் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டு வெளிப்பாடுகள். வீட்டிலும் நாட்டிலும் வளர்ச்சியும், அதனால் எழுச்சியும் மகிழ்ச்சியும் பொங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நமது அரசு செயல்பட்டு வருகிறது. சமத்துவமும், சுயமரியாதை உணர்வும் கொண்ட சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம். மக்களின் நலன் காப்போம். மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மீட்போம். ஜனநாயகப் பாதையில் பயணிப்போம். ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க’ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள்! தமிழ்நாட்டு மக்களுக்கும், கழகத்தோழர்களான அன்பு உடன்பிறப்புகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய இதயம் கனிந்த பொங்கல்-தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!