சென்னை: தமிழக அரசுப் பணிக்கான தேர்வுகளில் பங்கேற்போர் தமிழ் மொழித் தாளில் 40 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசுப் பணியில் சேர்பவர்கள், அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனை சட்டப்படி, மாநிலத்தின் அலுவல் மொழி அல்லது தமிழ்மொழி குறித்த போதிய அறிவுபெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது தமிழில் போதிய அறிவு இல்லாதவர்கள், தகுதி பெற்றிருந்து பணி நியமனம் பெற்றால், பணியமர்த்தப்பட்ட நாளில் இருந்து2 ஆண்டுக்குள் அரசால் நடத்தப்படும் தமிழ் மொழி 2-ம் தாள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்ணுக்கு குறையாமல் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி பணியாளர் சட்டத்தில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அறிமுகம் செய்தார்.
இதன்மூலம், பிஹாரை சேர்ந்தவர் தமிழ் படித்து, தேர்வில் தேர்ச்சி பெற்றால், அரசுப் பணியில் சேர முடியும். எனவே, சட்டத் திருத்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.