கட்டாக்: ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஆக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டில் உலக கோப்பை போட்டியை நடத்த ஒடிசா அரசு முன்வந்தது. இதன்படி, வருகிற 13-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக, சமீபத்தில் 15-வது ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் உரிமம் இந்தியாவுக்கு கிடைத்தது. இதனையடுத்து, ஒடிசாவின் கட்டாக் நகரில் உலக கோப்பை ஆக்கி போட்டியின் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.
இதுபற்றி ஆக்கி இந்தியா தலைவர் திலீப் திர்க்கி கூறும்போது:- இந்த உலக கோப்பை போட்டிக்காக ஒடிசா அரசுடன் இணைந்து ஆக்கி இந்தியா அமைப்பு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்த முறை, சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டா பெயரில் சர்வதேச ஆக்கி ஸ்டேடியம் ஒன்று 20 ஆயிரம் இருக்கை வசதிகளுடன் ரூர்கேலா நகரில் அமைக்கப்பட்டு உள்ளது. இது இந்தியா மட்டுமின்றி உலகின் மிக பெரிய ஸ்டேடியம் ஆக இருக்கும். போட்டி தொடர்களில் பங்கேற்பதற்காக அணி வீரர்கள் வருகை தந்துள்ளனர். அனைத்து அணிகளும் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய இரு நகரங்களில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும். இதற்காக சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.