சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கிய தின விழா-2023 இன்று தொடங்கப்பட்டது. இந்த திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த இலக்கிய படைப்புகளையும் அவர் பார்வையிட்டார். இதில் இரு நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்ட தமிழர் பண்பாட்டு நாணயங்கள், அச்சு பயன்பாடு எந்த அளவில் இருந்தது என்பதை விளக்கும் வகையில் படைப்புகள் ஏராளமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. இவை அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டபோது அதிகாரிகள் முழுமையாக விளக்கி கூறினார்கள். அதன்பிறகு விழா தொடங்கியதும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இலக்கிய படைப்பாளிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த இலக்கிய தின விழா 3 நாட்கள் வரை நடைபெறும் என்று கூறியுள்ளனர்.