சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த நவ.9-ம் தேதி தொடங்கி டிச.8-ம் தேதி வரை நடைபெற்றன.
தற்போது தமிழகத்தில் 6,20,41,179 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3,04,89,866 பேர், பெண்கள் 3,15,43,286 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மேலும், பட்டியலில் 3,310 வெளிநாடு வாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் 8 பேர் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது சேர்க்கப்பட்டனர். அதேபோல, 4,48,138 வாக்காளர்கள் மாற்றுத் திறனாளிகள்.
வாக்காளர் பட்டியலில் இளைஞர்கள் அதிகஅளவில் இடம்பெற வேண்டுமென்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, 18-19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் 2,52,048 பேர், பெண்கள் 2,14,171 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 155 பேர் என மொத்தம் 4,66,374 வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க விரும்புவோர் ‘elections.tn.gov.in’ எனற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம். அல்லது ‘www.nvsp.in’ என்ற இணையதளம், ‘voter helpline app’ மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பெயர்கள் சேர்க்கப்படும்.
மார்ச் 31-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பிக்கலாம். ஜன. 4-ம் தேதி வரை தமிழகத்தில் 3.82 கோடி பேர் ஆதார் எண் இணைக்க விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.