கேரளாவில் வடக்கும்முரியைச் சேர்ந்த பெண் சொந்த ஊரில் இருந்துக் கொண்டே 43 நாடுகளில் அறிமுகம் இல்லாதவர்களுடன் நட்பில் இருந்து வருகிறார்.
ரஸ்பின் அப்பாஸ் சாதாரண பெண் அல்ல..மிகவும் வியப்புக்குரிய பெண்மணி. 18 வயதாகும் இந்த பெண் சிறுவதிலேயே நிறைய துன்பங்களை கடந்து வந்தவள். இவருடைய தந்தை இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிவிட, தாய் ரஹீனாதான் ரஸ்பின் அப்பாசை வளர்த்து வந்துள்ளார். இவருடைய குடும்பம் வறுமையில் சிக்கியதால் ரஸ்பின் அப்பாஸ் இளம் வயதிலேயே கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளார்.குடும்ப வறுமைஅவரை துரத்த அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதனால் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் ,ஆறுதல் தேடுவதற்காக அவருடைய கதைகளை நாள்தோறும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தவர் அப்படியே அவர் உருவாக்கிய கைவினைப் பொருட்களின் புகைப்படங்களையும் அதில் பகிர்ந்து வந்துள்ளார். அதில் சாரா என்ற பெண் ரஸ்பினின் கைவினைப் பொருட்களை பாராட்டிவிட்டு ‘உனது முகவரியை கொடு உனக்கு நான் பரிசு ஒன்றை அனுப்புகிறேன்’ என்று கூறியுள்ளார். ரஸ்பினும் சாராவை பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் அவருக்கு தனது முகவரியை பகிர்ந்துள்ளார். ஆனால் சாரா பரிசு எதுவும் அனுப்பாத நிலையில்,அவருக்காக காத்திருந்துள்ளார் ரஸ்பின். சாராவின் கடிதத்தையும்,பரிசையும் எதிர்பார்த்து அஞ்சலகத்திற்கு நடையாய் நடந்துள்ளார். ஒரு நாள் வியக்கும் வகையில் சாரா இவருக்கு பரிசையும்,கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.
அதை கண்டு மகிழ்ந்த ரஸ்பின், தொடர்ந்து வேறு சில நண்பர்களையும் அடையாளம் கண்டு உள்ளார். அவ்வாறு அவர் நட்பு பாராட்டும் நபர்களை நன்கு தெரிந்த பிறகே ரஸ்பின் தனது முகவரியை கொடுத்து வந்துள்ளார். சில நண்பர்கள் கடிதங்கள் மூலமாகவும்,சில நண்பர்கள் மெயில்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டு வருகின்றனர். தற்போது ரஸ்பினுக்கு,பிரேசில், இத்தாலி,ஸ்பெயின்,துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட 43 நாடுகளில் நண்பர்கள் இருக்கிறார்கள்.அவருடைய நட்பு வட்டம் விரிவடைந்த நிலையில் சர்வதேச ஐக்கிய நாடுகளின் மனநலம் பற்றி ஆன்லைன் மாநாட்டில் ‘இந்தியர்களின் மன ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது’ என்பது உரையாற்றியுள்ளார். திருவாம்படி அல்போன்சா கல்லூரியில் பி.எஸ்.சி உளவியல் துறை எடுத்து படித்து வரும் ரஸ்பின் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக சேவையாற்றுவதை தனது கடமையாக கொண்டுள்ளார்…