சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது. இந்த கண்காட்சி மார்ச் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தவிழாவில், அமைச்சர்கள் கா.ராமசந்திரன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சுற்றுலா கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். மேலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தீவுத்திடலில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஹோட்டல் தமிழ்நாடு உணவகம், 10 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் திறந்தவெளி திரையரங்கம், தீவுத்திடல் முகப்பில் வள்ளுவர் கோட்டம் கல் தேர்,மாமல்லபுரம் சிற்பம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
இந்த கண்காட்சியில், தீயணைப்புத் துறை, ஆவின், மெட்ரோ ரயில், மின்சார வாரியம், சுகாதாரத் துறை, தொழிலாளர் நலத் துறை, மீன்வளத் துறை உள்ளிட்ட 27 அரசுத் துறைகள், 21 பொதுத் துறைகள் என 48 துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 20 ஆயிரம் சதுர அடிபரப்பளவில் பேய் வீடு, 3டி திரையரங்கம், டெக்னோ ஜம்ப், ஸ்கிரீன் டவர், ராட்சத ராட்டினம், நவீன கேளிக்கை சாதனங்கள், பனிக்கட்டி உலகம், சிறுவர் ரயில், மீன் காட்சியகம் உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்டபல்வேறு விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசியதாவது: தமிழக முதல்வரின் ஆக்கப்பூர்வமான பணிகளையும், மக்கள்நலனுக்காகச் செயல்படுத்தக் கூடிய புதிய திட்டங்களையும் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் திட்டங்களின் செயல் மாதிரிகளுடன் அரசுத் துறை அரங்கங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 125 சிறியகடைகள், 60 தனியார் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் நேரடியாக சுமார் 5 ஆயிரம்பேரும், மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் பேரும் வேலை வாய்ப்புகளைப் பெறுகின்றனர். வரும் காலங்களில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகப் பாரம்பரியம் மற்றும் ஆன்மிக சுற்றுலா, கடற்கரைசுற்றுலா, சாகசச் சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் வனச் சுற்றுலா, மருத்துவம் மற்றும் உடல்நலம் பேணும் சுற்றுலா, வணிகச் சுற்றுலா உட்பட 10 சுற்றுலா பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.