சென்னை: தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கூறியதாவது: தரவுகளின் அடிப்படையிலான அரசு (டேட்டா சென்ட் ரிக் கவர்ன்மெண்ட்) என்பது தி.மு.க. அரசின் முக்கியமான மக்கள் நல செயல் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஒரு தரவு சார்ந்த உட்கட்டமைப்பை உருவாக்கி குடிமக்களுக்கு அரசின் திட்டங்கள் எளிய முறையிலும், வெளிப்படையான தன்மையுடனும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய முடியும். மாநிலத்தில் பல்வேறு துறைகள் மூலம் பல நல திட்டங்கள் நடைபெற்று வருகிறது. நலத்திட்டங்களின் தகுதியான பயனாளிகளை முறையாக அடையாளம் காணுவதற்கு ‘மக்கள் ஐ.டி.’ திட்டம் பெரிதும் உதவுவதோடு, தரவுகள் துறைகளுக்கு திட்டமிட மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
தமிழக மக்கள் எண் எனப்படும் 12 இலக்க எண் மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. மாநில குடும்ப தரவு தள திட்டம் மற்றும் மக்கள் எண் திட்டம் எந்த விதத்திலும் தற்போது குடிமக்கள் பெற்றுவரும் எந்தவித நலத்திட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. தரவுகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டுவதும், நடைமுறைப்படுத்துவதும், தகுதி உள்ள பயனாளிகளுக்கு திட்டங்களின் பயன் கிடைக்கவில்லை என்ற குறைபாட்டையும், தகுதி இல்லாத நபர்களுக்கு திட்டங்கள் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் நிவர்த்தி செய்யும். மேலும் தரவுகளை வைத்து திட்டங்கள் தீட்டும் போது, அரசால் தேவைகளை முன்னுரிமை படுத்தவும் தேவைகளை துல்லியமாக கண்டறிந்து அதற்கேற்ப நிதி ஒதுக்கீடுகள் வழங்கவும் முடியும். ஆனால் மக்கள் ஐ.டி. ஆதாருக்கு போட்டியானது, ஆதாரை எதிர்ப்பது போல என தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அதற்கான பணிகளின் தொடக்கம் தான் மக்கள் ஐ.டி. திட்டம்.முன்னதாக சென்னை நந்தனத்தில் உள்ள க.அன்பழகன் மாளிகையில் எல்காட் நிறுவனத்தின் புதிய ஆதார் மைய சேவை அலுவலகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.