சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 6,300 பேருந்துகளுடன் 4,449 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 10,749 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேற்கண்ட 3 நாட்களில் மட்டும் சிறப்பு பேருந்துகள் மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.