மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா, இலங்கை அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை சந்திக்கிறார்.
இலங்கை கிரிக்கெட் அணியானது தலா 3 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி 20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால், சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய அணி நிர்வாகம் அதிக முன்னுரிமை வழங்காது என்றே கருதப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான இன்றைய முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கக்கூடும். வான்கடே ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த ஜோடி பெரிய அளவில் ரன்கள் சேர்க்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். தற்போது அணியில் தங்களுக்கான இடத்தை பற்றி கவலை கொள்ளாமல் இவர்கள் சுதந்திரமாக செயல்பட வழி கிடைத்துள்ளது.
இந்தியா: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் படேல், உம்ரன் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.
இலங்கை: தசன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா டி சில்வா, ஷாரித் அசலங்கா, பனுகா ராஜபக்ச, அஷேன் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, அவிஷ்கா பெர்னாண்டோ, ஷமிகா கருணாரத்னே, லகிரு குமரா, தில்ஷன் மதுஷங்கா, குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, பிரமோத் மதுஷன், கசன் ரஜிதா, சதீரா சமரவிக்ரமா, மகீஷ் தீக்சனா, நூவன் துஷாரா, துனித் வெல்லலகே.