மதுரை: தமிழக வணிகவரித் துறை மூலம் இந்த நிதி ஆண்டில் இதுவரை ரூ.96 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது நிதி ஆண்டின் இறுதிக்குள் ரூ.1.30 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் வணிக வரித்துறையில் 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அலுவலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் 1,000 துணை மாநில வரி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்படும் என கடந்தாண்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஓராண்டு ஆகியும் இந்த பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டியிருந்ததால், ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கூறியதாவது: பதவி உயர்வு, பணியிடங்களை ஒப்படைக்க மறுப்பது என 2 பிரதான கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் ஊழியர் சங்கங்கள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து முதல்வரிடம் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தனது துறை செயலர் உள்ளிட்ட அலுவலர்களுடன் சென்று நிலைமையை எடுத்துரைத்தார்.
பதவி உயர்வு அளிப்பதன் மூலம் வணிகவரித் துறையில் அரசு நிர்ணயித்துள்ள வரி வருவாய் இலக்கை எட்ட முடியும் என்றும், இந்த கோரிக்கையை செலவினமாக கருதாமல், வருவாயை கணக்கிட்டு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கோரிக்கை குறித்து விளக்கினார்.
இதைத்தொடர்ந்து நிதித்துறை 1,000 பேருக்கு பதவி உயர்வு வழங்க ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான அரசாணை ஓரிரு நாட்களில் வெளியானதும் வணிகவரித்துறையில் உதவியாளர்களாக பணியாற்றும் 1,000 பேர் துணை மாநில வரி அலுவலர்களாக பதவி உயர்வு பெறுவர் என்றனர்.
இதுகுறித்து வணிகவரித்துறை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது: வணிக வரித்துறையில் 3.86 லட்சம் டீலர்கள் பதிவு செய்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது 7.14 லட்சமாக உயர்ந்துள்ளது. 2,036 பணியிடங்களை ஒப்படைக்க இயலாது என்றும், அப்படி ஒப்படைத்தால் வணிகவரித்துறையில் அரசு திட்டமிட்டுள்ள வருவாயை அடைவது சிரமம் என அமைச்சர் பி.மூர்த்தி பதிவு செய்து முதல்வரிடம் அனுமதியும் பெற்றார் என தெரிவித்துள்ளார்.