உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்ட நிலையில் தற்போது வைரஸ் சீனாவில் தலைதூக்கத்தொடங்கிவிட்டது. கடந்த 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சீனாவில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிகபட்சமாக ஒரே நாளில் 3 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம் நிற்பதும், மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுவதும் என சீனாவில் இருந்து சமீபத்தில் வெளியான வீடியோக்கள், செய்திகள் கொரோனாவின் கோரத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளன.
மேலும், இதனை தொடர்ந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதேவேளை, தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும், பிற நாடுகள் சீனாவின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் சீனா குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், கொரோனா பாதிப்பு தொடர்பாக அதிக தகவல்களை சீனா வெளியிட வேண்டும் எனவும், சீனாவில் கொரோனா அதிகரிப்பு கவலைக்குரியது எனவும், பிற நாடுகள் கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்றுக்கொள்ள கூடியது தான் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்புடன் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் நிபுணர்களுடன் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில், சீனாவில் உள்ள கொரோனா சூழ்நிலை, கொரோனா சிகிச்சை முறை, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உலக சுகாதார அமைப்புடன் சீன அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் உலக சுகாதார அமைப்பின் உதவியை சீனா நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.