சென்னை: ஆங்கில புத்தாண்டான 2023-ம் ஆண்டு இன்று நள்ளிரவில் பிறக்கிறது. சென்னை மாநகரில் மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். மெரினா கடற்கரையில் இன்று மாலையில் இருந்தே மக்கள் கூட தொடங்கி விடுவார்கள். நள்ளிரவு 12 மணி அளவில் மெரினா கடற்கரை கடல்போல காட்சி அளிக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினாவில் திரண்டு ‘ஹேப்பி நியூ இயர்’ என உற்சாகமாக குரல் எழுப்பி புத்தாண்டை வரவேற்று மகிழ்வார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக இன்று இரவு 9 மணி முதல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் புத்தாண்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் 16 ஆயிரம் போலீசார் இன்று இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் எல்லை மீறுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல நடித்து பெண்களிடம் பாலியல் சீண்டலில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மாநகரம் முழுவதும் விடிய விடிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னை மாநகர சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி யாராவது வாகனங்களை இயக்கினால் அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும் போலீசார் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில் நடைபெறும் மது விருந்தில் பங்கேற்பவர்கள் ‘பார்ட்டி’ முடிந்ததும் வீடுகளுக்கு செல்ல ஓட்டல் நிர்வாகத்தினரே வாகன வசதியை ஏற்படுத்தி கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை மீறி மதுபோதையில் கார், மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர். அத்துடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புத்தாண்டையொட்டி பைக்ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகர எல்லையில் 100 காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 3 பைக்குகளில் ரோந்து சுற்றி வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று இரவு போலீசார் 300 பைக்குகளில் ரோந்து சுற்றி வந்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரை பகுதிகளில்தான் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு யாராவது காயம் அடைந்தால் உடனடியாக அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக சென்னை மாநகர் முழுவதும் 80 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயாராக நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னையை போன்று அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். காவல் உதவி தேவைப்படுவோர் 100, 044-24505959 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.