புதுடெல்லி : நவீன தொழில்நுட்ப யுகத்தில் புலம்பெயர்ந்தோர், இருந்த இடத்தில் இருந்தவாறு வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யவில்லை. நாட்டுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தரவுகள் இல்லாத நிலையில், இருக்கிற தரவுகளை வைத்து ஆய்வு செய்ததில், 85 சதவீத புலம் பெயர்ந்தோர் உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு பணி மற்றும் இதர காரணங்களுக்காக சென்றிருப்பது தெரியவந்துள்ளது. உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் கமிஷனுக்காக ஒரு பொதுத்துறை நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதற்கு ‘ரிமோட் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம்’. இதை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தொலைதூரத்தில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு, இந்த எந்திரம் மூலம் வாக்களிக்க முடியும். ஒரே வாக்குச்சாவடியில் உள்ள எந்திரத்தை பயன்படுத்தி, அதிகபட்சம் 72 தொகுதிகளுக்கான ஓட்டுகளை பதிவு செய்ய முடியும்.
மேலும் , அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த ஜனவரி 16-ந்தேதி கூட்டம் ஒன்றுக்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளுக்கு இதற்கான அழைப்பை தேர்தல் கமிஷன் விடுத்துள்ளது. தேர்தல் கமிஷனின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு செயல்முறை விளக்கங்களை செய்து காட்டுகிறது. மேலும் அரசியல் கட்சிகளிடம், ஜனவரி 31-ந்தேதிக்குள் எழுத்துமூலமான கருத்துகளும் கேட்கப்பட்டு உள்ளது. இந்த கருத்துகள் அடிப்படையில், எந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் முன்னெடுக்கும் என்று தெரிகிறது.