சென்னை: புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2022-ம் ஆண்டு முடிந்து 2023 ஆண்டு பிறப்பதையொட்டி அதனை வரவேற்க மக்கள் உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள். சென்னை முதல் கன்னியாகுமரி நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும் நிலையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள். புத்தாண்டு பிறக்கும் 31-ந்தேதி நள்ளிரவில் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு ‘ஹேப்பி நியூ இயர்’ என உற்சாகம் பொங்க கூச்சலிட்டு புத்தாண்டை வரவேற்பார்கள்.
சென்னை மாநகர் முழுவதும் சுமார் 450 இடங்களில் வாகன சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு பிறகு சாலைகளில் சுற்றுபவர்களை எச்சரித்து வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவிலும், புத்தாண்டு தினத்தன்றும் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் சவுக்கு கட்டைகளை வைத்து தடுப்புகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க சிறப்பு தனிப்படைகளும் அமைக்கப்பட உள்ளது.
மேலும், வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்தும் போலீசார் கண்காணிக்க உள்ளனர். நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்கள் இரவு முழுவதும் செயல்பட போலீசார் அனுமதி அளித்துள்ளனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு நீண்ட தூரம் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக இந்த அனுமதியை போலீசார் வழங்கி இருக்கிறார்கள். புத்தாண்டு அன்று போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை விதித்து செயல்பட்டாலும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வேகமாக செல்வதை தடுப்பது என்பது சில நேரங்களில் இயலாத காரியமாகவும் மாறிவிடுகிறது. இதை கருத்தில் கொண்டு அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொள்ள உள்ளனர். இதன்படி சென்னையில் உள்ள பெரிய மேம்பாலங்களை மூடிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரங்களில் உள்ள 40 மேம்பாலங்களின் நுழைவு பகுதி, இறங்கும் பகுதி ஆகியவற்றில் தடுப்புகளை அமைக்க உள்ளனர். புத்தாண்டையொட்டி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னையில் 20 ஆயிரம் போலீசாரும் மாநிலம் முழுவதும் 1 லட்சம் காவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.