வகுப்பறையில் உள்ள மாணவர்களின் பெயரையே, வருகை பதிவேட்டை பார்த்து தெரிந்து கொள்ளும் ஆசிரியர்கள் இருக்கும் இந்த காலத்தில், கேரளாவில் மோலி என்ற ஆசிரியர் தன்னிடம் பயின்ற 14,765 மாணவர்கள் பற்றியும் நினைவு கூர்ந்து வருகிறார்.
கேரளாவில் தாருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் மோலி ஜோஸ்.1977 ஆம் ஆண்டில் கோட்டயத்தில் உள்ள மார் சாலினாஸ் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியில் சேர்ந்தவர். அந்த பள்ளியில் சேர்ந்த நாளில் இருந்து படிப்பை முடித்து செல்லும் மாணவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வைத்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இந்த பள்ளியில் இருந்து இடம் மாறுதல் பெற்று புல்லேபாடியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்றவர், அந்தப் பள்ளியிலும் மாணவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர், அவருடைய டைரியில் 14 ,765 மாணவர்களை பற்றிய விவரங்களை எழுதி வைத்துள்ளார்.இது குறித்து பேசியவர் “என்னிடம் பயின்ற அனைத்து குழந்தைகளைப் பற்றிய நினைவுகளில் தினம் தினம் கரைந்து போகிறேன். அவர்களுடனான அந்த நினைவு மிகவும் பசுமையானது மறக்க முடியாதது. அந்த மாணவரிகளில் நடிகரும், இயக்குநருமான விஷ்ணு உன்னிகிருஷ்ணன் என்னிடம் பயின்ற மாணவர். ஒரு முறை மாணவர் உன்னிகிருஷ்ணனை அழைத்து ‘வகுப்பில் உள்ள மாணவர்கள் எத்தனை பேர் ஒரே சீருடை வைத்துள்ளார்கள் என்று எண்ணிக் கொண்டு வா என்று அனுப்பினேன். சிறிது நேரம் கழித்து வந்த உன்னிகிருஷ்ணன் ‘ஒரு மாணவரை தவிர, மற்ற அனைத்து மாணவர்களும் ஒன்றுக்கு மேலான சீருடை வைத்துள்ளார்கள்’ என்று கூறினார். அந்த ஒரு மாணவர் யார் என்று கேட்டபோது,அந்த ‘ஒரு மாணவர், தாம் தான் என்று, ‘பதிலளித்தார். பின்னர் விஷ்ணு உன்னிகிருஷ்ணனுக்கு ஒரு சீருடை வழங்கி உதவி செய்தேன்
என்று பழைய நினைவுகளில் கரைந்து போகிறார் மோலி ஜோஸ்.