புதுடெல்லி: சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் லட்சக்கணக்கான பேர் ஒமிக்ரானின் உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 300க்கும் குறைவாக உள்ள நிலையில், புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு இன்னும் அதிகமாக கண்டறியப்படவில்லை. இந்தியாவில் தற்போது கரோனா குறித்த அச்சம் தேவையில்லை என நிபுணர்கள் கருத்து கூறிவந்தாலும், மத்திய சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் உள்ள சஃப்தார்ஜுங் மருத்துவமனையில் நடைபெறும் பயிற்சி ஒத்திகையை நேரில் பார்வையிட்டார். முன்னதாக, இதுகுறித்து இந்திய மருத்துவச் சங்கத்தினருடன் திங்கள்கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், “இத்தகைய பயிற்சிகள் நம்முடைய சிகிச்சை முறைகளில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து சரி செய்ய உதவும் மற்றும் நமது பொதுச்சுகாதாரத்தின் வலிமையை மேம்படுத்த உதவும்” என்றார்.
இந்த பயிற்சி ஒத்திகையின் போது அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் உள்ள சுகதார வசதிகள், தனிமைப்படுத்தபட்ட வார்டுகளில் உள்ள படுக்கை வசதிகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், ஐசியு படுக்கைகள், வென்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகள் ஆகியவைகளின் இருப்பு குறித்தும் தேவை குறித்தும் கவனம் செலுத்தப்படும். அதேபோல், கரோனா மேலாண்மை பயிற்சி பெற்ற பொதுசுகாதார ஊழியர்கள், வென்டிலேட்டர் மேலாண்மையில் பயிற்சி பெற்ற ஊழியர்கள், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையங்களின் எண்ணிக்கைகளிலும் கவனம் செலுத்தப்படும். இதுகுறித்து சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூசன், செவ்வாய்க்கிழமை பயிற்சி ஒத்திகை நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் கடந்த வாரத்தில் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் டெல்லி அரசாங்கம், கரோனா அவசரநிலையை எதிர்கொள்ளும் விதமாக மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்குவதற்காக ரூ, 104 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கர்நாடகா அரசு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மாநிலத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் எங்கும் தளர்த்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கரோனாவை எதிர்கொள்வதற்காக, மரபணு கண்காணிப்பு, ஆக்சிஜன் நிலை, பரிசோதனை மற்றும் அவசர நிலைக்கான உடனடி செயல்பாடு உள்ளிட்ட 6 அம்ச திட்டங்களைக் கொண்டுள்ளதாக மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.