டெல்லி: கரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று இந்திய மருத்துவ சங்கத்துடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. கூட்டத்தில் நாட்டில் தற்போதைய கரோனா நிலவரம் மற்றும் கரோனா பரவலை எதிர்கொள்ள எவ்வளவு தூரம் நாடு ஆயத்தமாக இருக்கிறது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
சீனாவில் கரோனா வேகமாகப் பரவிவரும் சூழலில் சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் ஆர்டி பிசிஆர் பரிசோதனை சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பி.எப்.7 வைரஸால் இந்தியாவில் பாதிப்பு இருக்காது: சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே.நந்திகூரி தெரிவித்துள்ளார்.
“இந்திய மக்கள் பல்வேறு வகையான வைரஸ்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியர்களுக்கு ‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்ற மக்கள் பெருந்தொற்று தடுப்பாற்றல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாகவே கரோனாவின் டெல்டா வைரஸ் பரவல் காலத்திலும்கூட இந்தியாவில் மோசமான விளைவுகள் ஏற்படவில்லை.
நாடு முழுவதும் 90 சதவீதம் பேருக்கு இரு தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக டெல்டாவுக்கு பிறகு ஒமிக்ரான் வைரஸால் ஏற்பட்ட 3-வது கரோனா அலையில் இந்தியாவில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.
பிரதமர் வேண்டுகோள்: முன்னதாக நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி “உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது.
முகக்கவசம் அணிவது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக்கழுவுவது, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுதல் என கரோனா தடுப்பு நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாம் எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருந்தால், மகிழ்ச்சியுடன் வாழலாம்” என்று தெரிவித்துள்ளார்.