சென்னை: பொங்கலை முன்னிட்டு ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரைஅடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக நாளை முதல் (டிச.27)வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகிக்குமாறு நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டு (2022) பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பரிசுத் தொகை நிறுத்தப்பட்டு, அரிசி, வெல்லம், கரும்பு மற்றும் மளிகைப் பொருட்கள் என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து, வரும் பொங்கலுக்கு 2,19,14,073 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு, தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்காக ரூ.2,357 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.