சென்னை: தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, சாலிகிராமம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியாற்றுவதாகத் தகவல் பெறப்பட்டது. அதன் அடிப்படையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர், ஆபரேஷன் ஸ்மைலி குழு மற்றும் தன்னார்வ குழுவினருடன் புகார் தெரிவிக்கப்பட்ட கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, அங்கு பணியாற்றிய 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து சட்டப்படி, வேலையளித்தவர் மீது, தொழிலாளர் உதவி ஆய்வாளர் து.நீ.பாலாஜி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிறுவர்களை பணியமர்த்தியது குற்றம்எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, 3 வேலையளித்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
நீதிமன்றம் மூலம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம்வரை அபராதம் அல்லது 6 மாதம்முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும்சேர்த்து தண்டனையாக வழங்கப்படும் என்று கூறப்படுள்ளது.