சென்னை: தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கரோனா தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு முன்னதாகவே தமிழக முதல்வர் நேற்று முற்பகல் 12 மணிக்கு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைககளை வேகப்படுத்த அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் மருந்து கையிருப்பு, படுக்கை வசதி ஆகியவை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார். கரோனா தொற்று அதிகரித்து வரும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி தென்பட்டால் சோதனை செய்ய அறிவுறுத்தினார்.குறிப்பாக ஜப்பான், சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களை ரேண்டமாக 2 சதவீத பேரை சோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனை செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக பரிசோதனை செய்யும் பணி நாளை முதல் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களில் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.