டெல்லி:பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கான 48-வது கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடெல்லியில் இருந்தவாறு பங்கேற்றார். அவரோடு, நிதித் துறை உயரதிகாரிகளும் பங்கேற்றனர். மாநில நிதி அமைச்சர்கள் காணொளி காட்சி வாயிலாக இதில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறித்தும், இதில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, எந்த ஒரு பொருள் மீதும், சேவை மீதும் தற்போதுள்ள வரியை கூடுதலாக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனைத் தெரிவித்தார். மேலும், சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்ட நிதி சார்ந்த சில குற்றச் செயல்களை, குற்றமாகக் கருதத் தேவையில்லை என்ற முடிவும் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.இன்றைய கூட்டத்தில் மொத்தம் 15 விஷயங்கள் மீது முடிவு எடுக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், நேரமின்மை காரணமாக 8 விஷயங்கள் மீது மட்டுமே முடிவு எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.