பாலியல் வன்முறை மற்றும் சீண்டல்களில் பெண்கள்அமைதியாக இருக்காமல்,அந்த அமைதியைத் தகர்த்தெறிந்து விட்டு வெளியே வாருங்கள் என்று பெண்களுக்கு ஜோதிகா அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘பொன்மகள் வந்தாள்’ 2டி நிறுவனம் தயாரித்த இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றது.
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்குழந்தைகள் மற்றும் அந்த குழந்தைகளுக்கு எவ்வாறு நீதியை பெற்றுத் தரலாம் என்பதை வைத்து இந்தப் படத்தை தயாரித்திருந்தனர். பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்காக போராடும் வழக்கறிஞராக ஜோதிகா இந்தப் படத்தில் நடித்திருந்தார். மிகவும் சமூக அக்கறையோடு வெளியாகி இருந்த இந்த திரைப்படம் குழந்தைகள் மற்றும் பெற்றோர் இடத்தில் சிறப்பானதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தை பார்த்துவிட்டு ராயபுரத்தில் உள்ள 9 வயது சிறுமி, 48 வயது உறவினர் தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தாயிடம் சொல்லியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் உறவினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இந்தச் செய்தி வெளியானதிலிருந்து பலரும் ‘பொன்மகள் வந்தாள்’ படக்குழுவினரை பாராட்டி வந்தனர்.இந்தச் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஜோதிகா”அந்த அமைதியைத் தகர்த்தெறியுங்கள்.. ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக எழுந்து நிற்கும்போது, அவள் தன்னையறியாமல் மற்ற அனைத்து பெண்களுக்காகவும் நிற்கிறாள்” என்று கம்பீரமாக கூறியுள்ளார்.