புதுடெல்லி: மாநகராட்சியை தொடர்ந்து தன் வசம் வைத்திருந்த பாஜக இம்முறை தோல்வியை தழுவி இருக்கிறது.டெல்லி மாநகராட்சியை 24 வருடங்களுக்கு பிறகு கைப்பற்றியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 125 இடங்கள் தேவை எனும் நிலையில், 134 இடங்களை வசப்படுத்துகிறது ஆம் ஆத்மி. கடந்த 2017-ல் நடைபெற்ற டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 272 வார்டுகளில் 48 வார்டுகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இம்முறை 86 வார்டுகளில் கூடுதலாக வசப்படுத்தி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றும் நிலையில் உள்ளது.
கடந்த 2017 மாநகராட்சித் தேர்தலில் 181 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை பாஜக தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டது. ஆனால், இம்முறை, 103 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த முறை 30 வார்டுகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இம்முறை 10 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது. மற்ற வேட்பாளர்கள் 3 வார்டுகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர்.
தேர்தல் வெற்றியை அடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சதா,உலகின் மிக அழகிய மாநகராக டெல்லியை நாங்கள் மாற்றுவோம்” யார் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். “டெல்லி மக்கள் பாஜகவுக்கு சரியான பதிலடியை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.