செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் தேசிய எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்கள் தங்கி பயிற்சி எடுப்பதற்காக 28 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் ரூ.9,47,00,000 லட்சம் மதிப்பீட்டில் 5 மாடி கொண்ட தங்கும் விடுதிக்கான கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”கீரப்பாக்கத்தில் தேசிய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்குவதற்காக கட்டடங்கள் கட்டும் பணி இன்று காலை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளேன். இந்த பணி அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றார். மேலும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி கீரப்பாக்கம் வரை உள்ள 8 கிலோ மீட்டர் கொண்ட சாலை மிகவும் மோசமாக உள்ளதால் இதனை நான்கு வழி சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இங்குள்ள பொதுமக்களின் வசதிக்காக பள்ளி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளது” என்று கூறினார்.